பிரபாகரன் இல்லாத தீர்வு! புலம்பெயர் தமிழர்களின் மௌனம் நல்லதல்ல

“சுற்றிச் சுற்றி சுப்பற்ற கொல்லேக்கை” என்பது காலம் காலமாக தமிழ் மக்களிடையே இந்த வார்த்தைப் பிரயோகம் பேசப்பட்டுவருகின்றமை இப்பொழுது அடிக்கடி நினைவிற்கு வந்து போகின்றது.

இன்று இலங்கை அரசாங்கமும் அதைத் தான் செய்து கொண்டிருக்கின்றது. நாட்டில் தீர்வுத் திட்டத்தை பகிர்ந்து கொள்வதற்கு விடுதலைப் புலிகள் தடையாக இருப்பதாக கூறிவந்த இலங்கை அரசாங்கம். விடுதலைப் புலிகளை அழிப்பதையே குறியாகக் கொண்டிருந்தது.

நாட்டில் பயங்கரவாதத்தை இல்லாமல் செய்ததன் பின்னர், சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக தீர்வுத்திட்டம் முன்வைக்கப்படும் என்றது மகிந்த அரசு.

ஆனால், மகிந்த ராஜபக்ச தான் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றாத நிலையில், ஆட்சியில் இருந்தும் அனுப்பட்டார்.

தமிழ் மக்களின் ஆதரவோடு இன்றைய ஜனாதிபதியாக விளங்கும் மைத்திரிபால சிறிசேனவும், மகிந்த வழியில் தான் பயணிக்கின்றாரோ என்று அண்மைக்காலங்களாக சந்தேகங்கள் எழுந்திருக்கின்றன.

ஆட்சிக்கு வந்த சிறிது காலத்திற்குள், தீர்வைப் பெற்றுத் தருவேன் என்றார் ஜனாதிபதி மைத்திரி. எதிர்க் கட்சித் தலைவரான பின்னர் 2016ம் ஆண்டிற்குள் தீர்வு என்றார் இராஜவரோதயம் சம்பந்தன்.

ஆனால், 2016ம் ஆண்டு முடிவடைய இன்னும் ஒரு மாத காலம் இருக்கும் நிலையில், அடுத்த ஆண்டை இலக்காக்கியிருக்கிறார்கள் அவர்கள்.

தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வுத் திட்ட விவகாரமானது இந்த அரசாங்கத்திலும், காலம் கடத்தும் நிகழ்வாகத் தான் இருக்கப்போகின்றது என்பதை இப்பொழுதே ஊகித்துக் கொள்ள முடிகின்றது.

ஏனெனில் அரசியலைமைப்பு சீர்திருத்தத்திற்காக மக்களிடம் கருத்தறியும் ஆணைக்குழு நியமிக்கப்பட்டதுடன், உப குழுக்கள் ஆறும் நியமிக்கப்பட்டிருந்தன.

குறித்த குழுவானது வடக்கு கிழக்கு உட்பட நாடு முழுவதும், புதிய அரசியலமைப்பு சீர்திருத்தம் குறித்து மக்களிடம் கருத்துக்களைக் கேட்டறிந்தது.

அதனுடைய யோசனைகளும் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டு, அது மேலும் முன்னெடுக்கப்பட்டுவருவதாக நம்பகத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

குறித்த ஆணைக்குழுவின் யோசனையின்படி, வடக்கில் காணி மற்றும் பொலிஸ் அதிகாரம் மாகாண அரசாங்கத்திற்கும், ஆளுநர் நியமிப்புக் குறித்து ஜனாதிபதி முதலமைச்சரோடு கலந்தாலோசித்துவிட்டே நியமித்தல் போன்ற தொடர்பில் முக்கியமான சில விடையங்கள் உள்ளடக்கப்பட்டிருந்ததாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில் சீர்திருத்தப்படவுள்ள அரசியலமைப்பில் இன்றைய அரசாங்கம் மறந்தும் கூட மருந்துக்கு தமிழ் மக்களுக்கு அதிகாரங்களை பகிர்தளிக்க கூடாது என்பதில் சிங்கள கடும்போக்குவாதிகள் பலர் ஒற்றுமையாகச் செயற்படுகின்றார்கள் என்பதை அண்மைக்காலமாக அவர்களின் இனவாதச் செயற்பாடுகளை வைத்தே உணரமுடிகின்றது.

தெற்கு இனவாதிகளையும், வடக்கு, கிழக்குத் தமிழ் மக்களையும் சமாளிக்க வேண்டிய நிலையில் மைத்திரி, ரணில் அரசாங்கம் இருக்கின்றது.

இதனால் வடக்கு மக்களுக்கு அரசியல் தீர்வை விரைவில் பெற்றுத்தருவதாகக் கூறிக் கொண்டும், தெற்கில் உள்ளவர்களுக்கு தமிழ் மக்களுக்கான அதிகாரம் எப்போதும் ஒற்றையாட்சிக்குள் தான் என்பதை அரசாங்கம் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருக்கிறது.

அரசாங்கத்தின் எல்லாச் செயற்பாடுகளுக்கும் முழு ஆதரவைக் கொடுக்கும் அதேவேளை, காலம் கடத்தும் அரசாங்கத்திடம் அரசியல் தீர்வு குறித்து மௌனமாக இருப்பது தமிழ் மக்களுக்கு நேர்ந்த சாபக்கேடு என்றே சொல்ல இயலும்.

ஏனெனில், நீண்டகாலமாக ஏமாற்றப்பட்டுக் கொண்டிருக்கும் தமிழ் மக்களை, மீண்டும் மீண்டும் நல்லாட்சி என்ற பெயரில் அரசாங்கம் ஏமாற்றிக் கொண்டிருக்கிறது.

அதற்கு உடந்தையாக தமிழ்த் தலைமைகள் இருந்து விடக் கூடாது.

இதற்கிடையில் மீண்டும் தமிழ் மக்களை கள்ளத் தோணியில் வந்தவர்கள் என்றும், அவர்களுக்கு இந்த நாட்டில் சொத்துக்களும், உரிமைகளும் இல்லை என்று பேசியிருக்கிறார் ஞானசார தேரர்.

இது எவ்வளவு ஆபத்தான செயற்பாடு என்பதை நல்லாட்சி அரசாங்கம் கருத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த நாட்டின் தேசிய இனம் ஒன்றை கள்ளத் தோணியில் வந்தவர்கள் என்று குறிப்பிட்டு, நாட்டில் உரிமையற்றவர்கள் என்பதை தெற்கில் உள்ள இளைஞர்களிடத்தில் விதைப்பதன் ஊடாக மீண்டுமொரு இனக்கலவரத்திற்கு வித்திட்டுக் கொண்டிருக்கின்றார்கள் என்பதை நன்கு உணரமுடிகின்றது.

முன்னதாக, கொழும்பில் ஊடக சந்திப்பை நடத்திய முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச, சிங்களவர்களைப் பகைத்துக் கொண்டால் தமிழ் மக்கள் நாட்டில் நிம்மதியாக வாழமுடியாது என்று கருத்துக் கூறியிருக்கின்றார் என்ற ஊடக கருத்தால் குழப்பங்கள் நீடிக்கிறது.

ஒரு காலகட்டத்தில் வாய் திறக்கவே பயந்தவர்கள், இன்று தமிழ் மக்களுக்கு நேரடியாக எச்சரிக்கை விடுத்துவரும் அளவிற்கு தமிழ் மக்களின் நிலமை படுமோசமானதாக மாறியிருப்பதை தமிழ்த் தலைமைகள் சரியாகக் கையாளவில்லையா எனும் வினா எழுகிறது.

இங்கு தான் தமிழ் மக்கள் தம் தலைமைகளுக்கு அதிகளவான அழுத்தம் கொடுக்க வேண்டும்.

கடந்த காலங்களில், ஏற்பட்ட அனுபவங்களின் வாயிலாக தமிழ்த் தலைமைகள் பாடங்களைக் கற்றிருக்கும் என்று நினைத்தால், அவற்றினை உணரத் தவறினால் மீண்டும், மீண்டும் அரசாங்கம் ஏமாற்றிக் கொண்டே இருக்கும்.

தமிழ் மக்களின் பிரச்சினைகளை இன்னும் பல ஆண்டுகளுக்கு இழுத்துக் கொண்டு செல்வார்கள் என்றே தோன்றுகின்றது.

பூனையில்லாத வீட்டில் எலிகளுக்குக் கொண்டாட்டம் என்பதைப் போல, பிரபாகரன் இல்லாத நாட்டில் அதிகார சக்திகள் தமிழ் மக்களை எமாற்றலாம் என நினைக்கிறார்கள்.

ஏமாற்றும் அரசாங்கத்தோடு சேர்ந்து தமிழ் மக்களை ஏமாற்றும் நயவஞ்சகத் தன்மை என்று தான் ஒழியுமோ.

ஆனால், இது குறித்து புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் குரல்கொடுக்க வேண்டிய காலம் தற்பொழுது எழுந்திருக்கிறது.

தமிழ் அரசியல் தலைவர்கள் தாங்கள் எடுக்கும் முடிவுகளை புலம்பெயர் தமிழர் அமைப்புக்களுடன் ஆராயும் முழுமையான களம் இன்னும் திறக்கப் பட வில்லை. இங்கு தான் யாருக்கும் பிடிவாதம் கூடாது.

குறிப்பாக, விடுதலைப் புலிகளின் இடைவெளிகளுக்குப் பிறகு, இப்பொழுது நாட்டில் ஒரு வகையான அமைதியான சூழல் ஏற்பட்டிருக்கிறது.

இதனைப் பயன்படுத்தி இனப்பிரச்சினைக்கான தீர்வினைப் பெறவேண்டிய கடமை புலம்பெயர் அமைப்புக்களுக்கு உண்டு.

இப்பொழுது ஓரளவிற்கேனும் இலங்கை அரசாங்கத்திற்கு சர்வதேச நெருக்கடிகள் இருக்கின்றன. இன்னும் சிறிது காலத்தில் அந்த நெருக்கடி இல்லாமல் போகும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.

இந்நிலையில், மைத்திரி தலைமையிலான அரசாங்கத்தினைக் கொண்டு எவ்வளவு விரைவாக தீர்வினைப் பெறமுடியுமோ அவ்வளவு விரைவாகவும், விவேகமாகவும், புத்திசாலித்தனமாகவும் செயற்படவேண்டும். இல்லையேல் இருக்கிறதும் இல்லாமல் போகும்.

அவர்கள் இருக்கும் அதிகாரங்களையும் புடுங்கி எடுப்பதற்கு காத்திருக்கின்றார்கள். பொறுமை காத்தாலோ, அன்றி கிடைக்கும் என்று இருந்தாலே எல்லாவற்றுக்கும் சிக்கல் தான். தமிழனுக்கு நாமம் உறுதி.