எதிர்க்கட்சித் தலைவருக்கு வீடு வழங்குவதில் இத்தனை சிக்கல்களா?

எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுக்கு உத்தியோகப்பூர்வ வாசஸ்தலம் வழங்க அரசாங்கம் தயாராக உள்ளதாகவும், இருப்பினும் நாம் வழங்கும் வீடுகள் அவருக்கு ஏற்றதாக அமையவில்லை எனவும் நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மதும பண்டார தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார். தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

நாம் வழங்கும் வீடுகள் அவருக்கு திருப்தி இல்லை என்றால் எனது வீட்டினை கொடுத்து இந்த பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார்.

பல வாசஸ்தலங்களை எதிர்க்கட்சி தலைவருக்கு காட்டியுள்ளோம். ஆனால் அவர் எதற்கும் விருப்பம் தெரிவிக்கவில்லை, A, B, C தரத்தில் கூட நல்ல வீடுகள் எங்களிடம் உள்ளது ஆனால் அவையும் அவருக்கு பொருந்தவில்லை.

நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் என்ற வகையில் நாம் அவருக்கு வாடகை மூலம் ஒரு வீட்டினை வழங்குவதற்கு முடிவு செய்துள்ள போதிலும் சரியான முடிவுகள் கிடைக்கப்பெறவில்லை.

இருப்பினும் தற்போது அவருக்கு பொதுத்தமான வாசஸ்தலம் வழங்காமல் இருப்பது எமக்கு பாரிய பிரச்சினையாக உள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.