தமிழ் மக்களால் கவலையில் சம்பந்தன்..! ஆறுதல் சொன்ன மைத்திரி! நடந்தது என்ன..?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க் கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தலைமையிலான குழுவினர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நாடளுமன்றக் கட்டடத் தொகுதியில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.

இது குறித்து நேற்றைய தினம் பல்வேறு தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்நிலையில் இது தொடர்பில் மேலதிக தகவல்கள் சில வெளியாகியிருக்கின்றன.

வடக்குக் கிழக்கில் நிலவிவரும் பிரச்சினைகளுக்கு உரிய வகையிலான தீர்வுகள் வழங்கப்படும் என்று வழங்கப்பட்ட வாக்குறுதிகளின் படி அந்தப் பிரச்சினைகள் தீர்க்கப்படாமல், காலம் கடத்தப்பட்டு வருவதாக கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்றக் கூட்டத்தின் போது கவலை வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் வடக்குக் கிழக்கில் இப்பொழுது ஏற்பட்டிருக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடத்திலும், பிரதமர் ரணிலிடமும், மகஜர் ஒன்று கையளிப்பது தொடர்பிலும் கூட்டமைப்பினர் முடிவு செய்திருக்கின்றனர்.

இந்நிலையில் நாடாளுமன்ற விவாதத்தில் கலந்து கொள்வதற்காக நேற்றைய தினம் நாடாளுமன்றம் வந்திருந்த ஜனாதிபதியை கூட்டமைப்பின் 16 மக்கள் பிரதிநிதிகள் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

இக்கலந்துரையாடலின் போது, தமிழ் மக்கள் மைத்திரிபால சிறிசேன மீது அதிக நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். அதன் காரணமாகவே அவர்கள் தேர்தலில் உங்களுக்கு வாக்களித்தார்கள்.

இப்பொழுது அரசியலமைப்பு உருவாக்கச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. இதற்கு வரவேற்பினையும் மகிழ்ச்சியையும் வெளியிடுகின்றோம் என்று கூறியிருக்கிறார் எதிர்க் கட்சித் தலைவர்.

ஆனால், நாங்கள் எங்கள் மக்களிடத்தில் வாக்குறுதிகளைக் கொடுத்தே நாடாளுமன்றம் வந்தோம். அவர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்ற வேண்டிய கடமை எமக்குண்டு.

தீர்வுகளையும், பிரச்சினைகளையும் தீர்ப்பதில் கால இழுத்தடிப்புக்கள் நீண்டு கொண்டு செல்லும் போது எமக்கிடையே பிரச்சினைகள் அதிகரிக்கின்றன.

எங்கள் மக்களுக்கான பிரச்சினைகள் தொடர்பில் நீங்கள் தீர்ப்பதாக வாக்குறுதிகளை வழங்கியிருக்கிறீர்கள். அது தொடர்பாக தங்களின் அவதானிப்பு அவசியம் என்று கூறியிருக்கிறார் சம்பந்தன்.

இதனை கேட்டுக் கொண்டிருந்த ஜனாதிபதி, தேர்தல் காலங்களின் போது நாங்கள் வழங்கியிருந்த வாக்குறுதிகளை மறக்கவில்லை.

நாட்டில் ஒவ்வொரு இனங்களுக்கும் இடையில் நட்புறவையும், நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்ப வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றேன். அதுவே என்னுடையதும், அரசாங்கத்தினதும் குறிக்கோளாகும்.

இப்பொழுது புதிய அரசியலமைப்பு உருவாக்கப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. இப்புதிய அரசியலமைப்பை நிறைவேற்றுவதில் பல்வேறு சிக்கல்களைச் சந்திக்க வேண்டிய நிலைவரும்.

எதிர்ப்புக்களும், ஆதரவுகளையும் நாம் சந்திக்க வேண்டும். எனினும் அதனை நாம் முழுமையாக எதிர்கொள்ள வேண்டும். நாட்டில் புதிய அரசியலமைப்பை நிறைவேற்றி மக்களை ஒன்றிணைக்க வேண்டியது நமது கடமை.

இந்தப் புதிய அரசியலமைப்பை எவர் உதிர்த்தாலும் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தைக் கொண்டு நிறைவேற்றுவோம் என்பதில் நம்பிக்கையாக இருக்கிறேன்.

புதிய அரசியலமைப்பின் மூலமாக பிரச்சினைகளுக்கு தீர்வு எட்டப்படும் என்பதில் நாம் உறுதியாக இருக்கின்றோம். தொடர்ந்து கூட்டமைப்பினரோடு பேசிய ஜனாதிபதி,

நாட்டில் நிலவிவரும் இனப்பிரச்சினை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இந்திய அரசாங்கத்திடம் 13வது திருத்தச் சட்டத்திற்கு அப்பால் சென்று தீர்வினை வழங்குவேன் என்ற வாக்குறுதியினை வழங்கியிருந்தார்.

எனினும் தீர்வு தொடர்பான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கம் வேளையில் அதனை குழப்பும் செயற்பாடுகளில் சிலர் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். எனினும் நாம் அனைவரினதும் கருத்துக்களையும் கேட்டறிய வேண்டும்.

முக்கியமாக இப்பிரச்சினை தொடர்பில் மகிந்த ராஜபக்சவிடம் இருக்கும் நிலைப்பாடு என்ன என்பதை அறிய வேண்டும். அதற்கான முயற்சிகள் இப்பொழுது நடந்து கொண்டிருப்பதாக அறிகின்றேன்.

நாட்டில் அரசியல் தீர்வு ஏற்பட்டு இனங்களுக்கிடையில் ஒற்றுமை நிலவினால் அபிவிருத்திகளை இலவாக முன்னெடுக்க முடியும் என்றும் ஜனாதிபதி மகிழ்ச்சி தெரிவித்திருக்கிறார்.