கூட்டமைப்புடன் முட்டி மோதிக்கொள்ளும் சுவாமிநாதன்

அரசியல் களத்தில், அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான முரண்பாடுகளும், முட்டுப்பாடுகளும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன.

ஐ.தே.க.வின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் டி.எம். சுவாமிநாதன், அமைச்சராகப் பதவியேற்ற பின்னர், வடக்கில் 65 ஆயிரம் பொருத்து வீடுகளை அமைக்கும் பாரிய திட்டம் ஒன்றை முன்வைத்தார்.

இங்கு தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும், அமைச்சர் சுவாமிநாதனுக்கும் இடையில் மோதல் உருவானது.

இந்திய வம்சாவளி வர்த்தகரான லக்ஸ்மி மிட்டலின், ஆர்சிலர் மிட்டல் நிறுவனத்துடன் இணைந்து, 65 ஆயிரம் உலோக வீடுகளை பொருத்தும், திட்டத்தை அமைச்சர் சுவாமிநாதன் முன்வைத்த போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்போ, வடக்கு மாகாணசபையோ அதனை ஆதரிக்கவில்லை.

இந்த திட்டம் வடபகுதிக்குப் பொருத்தமற்றது என்றும், செலவு அதிகமானது என்றும் கூட்டமைப்பு அதனை நிராகரித்தது.

வடக்கில் பெரும்பாலான காலம் வெப்பம் கூடிய காலநிலையைக் கொண்டது. அங்கு உருக்கினால் அமைக்கப்பட்ட இரும்புக்கூண்டுக்குள் மக்கள் வசிப்பது கடினம். அது சுகாதார ரீதியில் பாதிப்புகளையும் ஏற்படுத்தும். பரம்பரை பரம்பரையாக வாழத்தக்க வசதியான வீடுகளை கட்டி வாழ்ந்து பழக்கப்பட்ட தமிழர்களுக்கு, உலோகத் தகடுகளில் வீடுகளை அமைத்துக் கொடுத்தால் அது எந்தளவு காலத்துக்கு தாக்குப் பிடிக்கும் என்று கூட்டமைப்பு கேள்விகளை எழுப்பியிருந்தது.

அதைவிட, உலோக வீடு மற்றும் அதற்குரிய தளபாடங்களை அமைத்துக் கொடுக்கும் இந்த திட்டத்துக்காக செலவிடப்படும் 21 லட்சம் ரூபா அதிகமானது என்றும் கூட்டமைப்பு கூறியிருந்தது,

வடக்கில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வீடுகள் தேவைப்படுகின்ற நிலையில், ஒரு வீட்டுக்கு அதுவும் நீண்டகாலம் தாக்குப்பிடிக்காத நிரந்தரமற்ற வீட்டுக்கு 21 லட்சம் ரூபா செலவிடுவதை விட, 10 லட்சம் ரூபா செலவில் இரண்டு மடங்கு மக்களுக்கு நிரந்தரமான வீடுகளை பாரம்பரிய முறைப்படி கட்டிக் கொடுக்க முடியும் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியிருந்தது.

ஒரு சில உலோக வீடுகள் யாழ்ப்பாணத்தில் வலிகாமம் பகுதியில் மாதிரியாக அமைக்கப்பட்டு கோலாகலமாக திறந்தும் வைக்கப்பட்டது. ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எதிர்ப்புகளை அடுத்து இந்த திட்டத்தை அரசாங்கம் கைவிட்டதாக கூறியிருந்தது.

65 ஆயிரம் உலோக வீடுகளை அமைக்கும் திட்டத்தில், அமைச்சர் சுவாமிநாதன் நிதி ஆதாயம் பெற முனைவதாக குற்றச்சாட்டுகள் எழுந்த போது அவர் அதனை நிராகரித்திருந்தார்.

தமது மூதாதையர்கள் போதிய சொத்துக்களை சேகரித்து வைத்துள்ளார்கள் என்றும், தானும் சட்டத்தரணியாக போதிய பணத்தை சம்பாதித்துள்ளதாகவும் அவர் பதிலளித்திருந்தார்.

ஆனாலும் இந்த உலோகத்தாலான- பொருத்து வீட்டுத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் இருந்து அமைச்சர் சுவாமிநாதன் பின்வாங்கவில்லை.

65 ஆயிரம் வீடுகளை அமைக்கும் திட்டம் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில், மீண்டும் அந்த திட்டத்துக்கு அவர் தூசி தட்டித் துவங்கப் போவதாக அறிவித்திருக்கிறார்.

65 ஆயிரம் வீட்டுத் திட்டத்தை இப்போது, 22 ஆயிரம் வீட்டுத் திட்டமாக மாற்றியுள்ளதாகவும், அதே பொருத்து வீடுகளை 16 லட்சம் ரூபா செலவில் அமைத்துக் கொடுக்கப் போவதாகவும் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் அமைச்சர் சுவாமிநாதன்.

வீடுகளின் தொகையும், குறைந்திருக்கிறது, அதற்கான செலவுத் தொகையும் குறைந்திருக்கிறது, ஆனால், இந்தத் திட்டம் எதற்காக எதிர்க்கப்பட்டதோ, அதன் அடிப்படை அம்சத்தில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை.

அதாவது உருக்கினால், செய்யப்பட்ட பொருத்து வீட்டுத் திட்டம் என்பதில் எந்த மாற்றமும் இல்லை.வடக்கில் ஒரு லட்சத்து 30 ஆயிரம் வீடுகள் தேவைப்படுவதாகவும், தமக்கு பொருத்து வீடுகள் தேவை என்று, 97 ஆயிரம் பேர் தம்மிடம் விண்ணப்பித்திருப்பதாகவும், அமைச்சர் சுவாமிநாதன் இப்போது நியாயப்படுத்தத் தொடங்கியுள்ளார்.

ஆனால், 97 ஆயிரம் பேர் வடக்கில் வீடுகள் தேவை என்று விண்ணப்பித்தது உண்மையே என்றாலும், அவர்கள் தமக்குப் பொருத்து வீடுகள் தான் தேவை என்று விண்ணப்பித்தவர்கள் அல்ல. வீட்டுத் திட்டம் ஒன்றுக்கான விண்ணப்பங்களாகவே அவை சமர்ப்பிக்கப்பட்டன.

அதனை அமைச்சர் சுவாமிநாதன் தமக்குச் சார்பாகப் பயன்படுத்திக் கொள்ள முற்பட்டிருக்கிறார்.மீண்டும் பொருத்து வீடுகளை அமைப்பதென்று முடிவு செய்தால். எதற்காக, 65 ஆயிரத்தில் இருந்து 22 ஆயிரமாக வீடுகளின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும்?

அதைவிட, பொருத்து வீட்டுத் திட்டத்துக்கு 21 லட்சம் செலவாகும் என்று முன்னர் கூறப்பட்டது, திடீரென இப்போது 16 லட்சம் ரூபா செலவில் அமைக்கப்படவுள்ளதாக அமைச்சர் சுவாமிநாதன் கூறியிருக்கிறார். அவ்வாறாயின், செலவுத் தொகை எவ்வாறு குறைந்தது என்ற கேள்வி எழுகிறது.

வீடுகளுக்கான வசதிகளைக் குறைத்ததால், செலவு குறைந்ததா அல்லது லாபத்தைக் குறைத்ததால், ஏற்பட்டதா இல்லை வேறேதும் வழியில் இது குறைந்ததா என்று தெரியவில்லை.

தமது இந்த திட்டத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் பயன்படுத்துவதற்கு முற்பட்ட அமைச்சர் சுவாமிநாதன், அந்த முயற்சி வெற்றியளிக்காத நிலையில் தான், கூட்டமைப்புக்கு எதிரான பிரசாரங்களைத் தீவிரப்படுத்தியிருக்கிறார்.

ஏற்கனவே 65 ஆயிரம், பொருத்து வீடுகளை அமைப்பதற்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்ப்பை வெளியிட்ட நிலையில், 22 ஆயிரம் பொருத்து வீடுகளை அமைப்பதற்கான திட்டத்துக்கு, ஆதரவளிக்குமாறு அவர், கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களை தனிப்பட்ட முறையில், தொலைபேசி மூலம் கோரியிருந்தார்.

ஒரு கட்டத்தில், கூட்டமைப்பின் வன்னி, கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் பொருத்து வீட்டுத் திட்டத்தை ஆதரிப்பதாகவும், சிலர் மட்டுமே அதனை எதிர்ப்பதாகவும் பாராளுமன்றத்தில் கூட அமைச்சர் சுவாமிநாதன் கூறியிருந்தார்.

தனது திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக, கூட்டமைப்புக்குள் குழப்பத்தை ஏற்படுத்தி, இரண்டாக உடைப்பதற்கு மேற்கொண்ட முயற்சியாகவே இதனைக் கருதலாம்.

அமைச்சர் சுவாமிநாதன் பாராளுமன்றத்தில் இதனை அறிவித்த போது, கூட்டமைப்பு உறுப்பினர் சிறிதரன், தாம் இதற்கு ஆதரவளிக்கவில்லை என்றும், இந்த விடயத்தில் எல்லா உறுப்பினர்களும் ஒரே நிலைப்பாட்டில் இருப்பதாகவும் அறிவித்திருந்தார்.

அமைச்சர் சுவாமிநாதன், கூட்டமைப்பு உறுப்பினர்களை உடைக்க முனைகிறார் என்று அறிந்தவுடன், கடந்த 11ம் திகதி பாராளுமன்றக் கட்டடத்தொகுதியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூடி ஆராய்ந்தனர்.

அதற்குப் பின்னர், அமைச்சர் சுவாமிநாதனின் செயற்பாடு குறித்து அதிருப்தியை வெளியிட்டும், பொருத்து வீட்டுத் திட்டத்துக்கு எதிர்ப்பைத் தெரிவித்தும், 12ம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும், கூட்டமைப்பின் 16 பாராளுமன்ற உறுப்பினர்களும் கையெழுத்திட்ட கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டது.

இதற்குப் பின்னர் சுவாமிநாதனை கூட்டமைப்பு உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் வைத்து தாக்குவதும், அவர் யாழ்ப்பாணத்தில் போய் கூட்டமைப்பை தாக்குவதுமான நிலைமை மாறியிருக்கிறது.

வரவு – செலவுத் திட்ட விவாதத்தில் உரையாற்றிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா, அமைச்சர் சுவாமிநாதன், பொருத்து வீட்டுத் திட்டத்தை திணிக்க முனைவதாக குற்றம்சாட்டினார்.

அதனால், அவரது அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடுகளுக்கு எதிராக வாக்களிப்பது குறித்து கூட்டமைப்பு ஆராய்வதாகவும் அவர் கூறியிருந்தார்.

அரசாங்கத்தின் வரவு – செலவுத் திட்டம் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தாலும், இரண்டாவது வாசிப்பின் மீது நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், அதற்கு ஆதரவாகவே கூட்டமைப்பு வாக்களித்திருந்தது.

இந்த நிலையில் சுவமிநாதனின் அமைச்சுக்கான நிதி ஒதுக்கீட்டைக் கூட கூட்டமைப்பு எதிர்க்குமா என்பது சந்தேகம் தான்.அவ்வாறு செய்யப்போனால், அதனை அவர் இன்னும் கூடுதலாகச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் நிலையே ஏற்படும்.

ஏற்கனவே அவர் யாழ்ப்பாணத்தில் சென்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை வைக்கோல் பட்டறை நாய்களுக்கு இணையாக விமர்சித்து வருகிறார்.

வடக்கில் எல்லாத் திட்டங்களையும் கூட்டமைப்பே குழப்புவதாக அவர் பட்டியல் போட்டுக் கொண்டிருக்கிறார்.

இரணைமடு குடிநீர் திட்டம், வவுனியா பொருளாதார மத்திய நிலையத் திட்டம், பொருத்துவீட்டுத் திட்டம் என்று எல்லாவற்றையும் கூட்டமைப்பே குழப்புவதாக அவர் கூறும் குற்றச்சாட்டுகள், தமிழ் மக்களின் கவனத்தை ஈர்க்கக் கூடும்.

இந்த நிலையில், தமிழ் மக்களுடன் தொடர்புடைய புனர்வாழ்வு அமைச்சு மற்றும் இந்து கலாசார அமைச்சு ஆகியவற்றுக்கான நிதி ஒதுக்கீடுகளுக்கு எதிராக கூட்டமைப்பு வாக்களித்தால் அதனையும், சுவாமிநாதன் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் நிலையே ஏற்படும்.

தமது திட்டங்களின் மீதுள்ள குறைபாடுகளை மறைத்து விட்டு, அந்த திட்டங்களை செயற்படுத்த முடியாமைக்கான பழியை கூட்டமைப்பு மீது போடுவது மாத்திரமே அமைச்சர் சுவாமிநாதனின் திட்டமாகத் தெரியவில்லை.

இதற்குப் பின்னால் ஒரு அரசியல் இழுபறியும் தெரிகிறது.வடக்கில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் ஐ.தே.க.வைப் பலப்படுத்தும் ஒரு முயற்சியாகவும், இது பார்க்கப்படுகிறது.

அத்துடன் அமைச்சர் சுவாமிநாதன் வடக்கில் தனது பலத்தைக் கட்டியெழுப்ப முனைகிறாரா என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.

வடக்கில் பல்வேறு பிரச்சினைகள், விவகாரங்களில் கூட்டமைப்பையும், மாகாண சபையையும் ஒதுக்கி விட்டு, தன்னிச்சையாக அவற்றை நிறைவேற்ற முனைவதில் அவர் காட்டும் ஈடுபாடு அதனையே வெளிப்படுத்துகிறது.