நிரந்தர அரசியல் தீர்வு விடயத்தில் சர்வதேச சமூகம் பேராதரவு!- இரா.சம்பந்தன்

அரசியல் சாசனம் சம்பந்தமாக ஓர் முடிவு எடுக்கப்பட்ட பின் மக்களிடம் சென்று விளக்குவோம். எவ்வகையான தீர்வு வரப்போகிறதென்று. ஆகையால் மக்களை யாரும் குழப்பவிடாமல் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமெனக் கூறினார் இரா.சம்பந்தன்.

எமது தமிழ் மக்களுடைய அங்கீகாரமில்லாமல் எமது கட்சிகளுடைய ஒத்துழைப்பு இல்லாமல் தனிப்பட்ட முறையில் நாம் எதையும் செய்யப்போவதில்லை.

எமது தமிழ் மக்களுக்கு பயனற்ற, அவர்கள் விரும்பாத எந்தவொரு தீர்வையும் நாம் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை.

எமது பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாத சாசனத்தை நாம் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்பதை உறுதியாக கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

இதேவேளையில் நிரந்தரமான நியாயமான ஒரு தீர்வு கிடைக்குமாக இருந்தால் அதை நாம் இழக்க முடியாது. இதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.

வட, கிழக்கு இணைப்பைப் பொறுத்தவரை முஸ்லிம் மக்கள் மத்தியில் ஒரு தெளிவான நிலைப்பாடு இருப்பதாகத் தெரியவில்லை. இருந்தாலும் நாங்கள் விரும்புகின்றோம்.

முஸ்லிம் மக்களும் தமிழ் மக்களும் தமிழ்க் கட்சிகளும் முஸ்லிம் கட்சிகளும் இணைந்து கூட்டாக செயற்பட்டு இணைப்பு சம்பந்தமாக நல்லதொரு முடிவுக்கு வரலாமென நம்புகிறோம். அதையே நாம் விரும்புகின்றோம்.

முஸ்லிம் மக்களுடைய ஒத்துழைப்பின்றி இணைப்பு தொடர்பில் ஒரு முடிவை நாம் காண முடியாது.

எங்களது இணக்கப்பாடில்லாமல் முஸ்லிம் மக்கள் ஒரு திருப்திகரமான தீர்வை பெறமுடியாது என்பதையும் அவர்கள் உணர்ந்துகொள்ள வேண்டும்.

ஆகவே இவ்விடயம் சம்பந்தமாக பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. சில பேச்சுவார்த்தைகள் இரு தரப்பினரிடமும் முடிவடைந்துள்ளது.இவ்விடயத்தில் ஒரு முன்னேற்றம் காணப்பட்டிருக்கின்றது என என்னால் உறுதியாக கூறமுடியாது.

இவ்விடயங்களை நடைமுறைப்படுத்துவதற்கு சர்வதேச ரீதியாகப் பார்ப்பின் பல்வேறு நடைமுறைகளும் ஒழுங்குகளும் அரசியல் சாசனங்களும் உண்டு. இது எவருக்கும் பாதிப்பையோ, குந்தகத்தையோ ஏற்படுத்தாத வண்ணம் பார்த்துக்கொள்ள சந்தர்ப்பமுண்டு.

இதுபற்றி தற்பொழுது பேசி ஒரு குழப்பத்தை ஏற்படுத்தாமல் அமைதியாகவுள்ளோம்.முஸ்லிம் மக்கள் மத்தியில் குழப்புவதற்கும் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அண்மையில் ராஜபக்ச அணியில் உள்ள சிலருடன் நான் உரையாடிய போது அவர்களும் இப்பிரச்சினைக்கு ஒரு நிரந்தரமான தீர்வு காணப்பட வேண்டுமாயின் ஒரு அரசியல் சாசனம் தேவை. இவ்வாறு இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்படாவிட்டால் நாடு முன்னேறுவது கஷ்டம் என்ற கருத்தை ஏற்றுக்கொள்கிறார்கள்.

முற்போக்கு சிந்தனையுள்ள பலர் இக்கருத்தை கூறி வருகின்றார்கள். சந்திரிகா அம்மையார் காலத்தில் அவரால் முன்வைக்கப்பட்ட தீர்வுப்பொதியை கொண்டுவர முழு ஆதரவு கொடுத்தவர்களே அந்த அணியினராகும்.

இம்முயற்சியை நாம் தற்பொழுது தொடங்கியிருக்கிறோம். தொடர்ந்து அவர்களுடனும் பேசுவோம்.சர்வதேசம் ஆதரவு சர்வதேச ரீதியாக பார்ப்பின் இலங்கையில் நிரந்தரமான அரசியல் தீர்வு கொண்டுவரப்பட வேண்டுமென்பதில் பேராதரவு இருக்கின்றது.

ஐ.நா. சபையோ மனித உரிமைப் பேரவையோ ஐரோப்பிய ஒன்றியமோ அமெரிக்க, பிரித்தானிய, இந்திய, ஜப்பானோ எல்லா நாடுகளும் ஏற்பட்டிருக்கும் இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி ஒரு அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்பதற்கு ஆதரவான கருத்து மிகவும் தீவிரமாக இருந்து வருகின்றது.

அமெரிக்காவில் தற்போது மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. இதன் காரணமாக எமது கருமத்தைக் கையாண்டு வந்த அதிகாரிகள் மாற்றமடையக் கூடும். இது ஒரு முக்கியமான விடயம். இதையும் நாம் கவனத்தில் எடுக்க வேண்டும்.

ஏனெனில் அமெரிக்காவினால்தான் இலங்கைக்கெதிரான பிரேரணை கொண்டுவரப்பட்டு அதை நிறைவேற்றுவதற்கு முன்னின்றவர்கள். அமெரிக்க ஜனாதிபதியும் அமெரிக்க இராஜாங்க அமைச்சும். இது ஒரு முக்கியமான விடயம்.

பல விடயங்கள் தொடர்பில் கருமங்கள் முன்னெடுக்கப்படவில்லை. உதாரணமாக நீதி விசாரணை போர்க்குற்றம் உண்மை அறியப்படுவது. மனித உரிமை மீறல். மக்களுக்கு பரிகாரம் காணப்படாமை போன்ற விடயங்கள் தொடர்பிலும் இவ்விதமான சம்பவங்கள் மீண்டும் ஏற்படா வண்ணம் தடுப்பதற்கான நடவடிக்கைகள் போன்ற பல விடயங்கள் நடைபெற வேண்டியுள்ளது. இவை நடைபெறவேண்டும்.

அரசியல் சாசன நிறைவேற்றம், அதேவேளை சர்வதேச விசாரணை என்பவற்றை ஒரே சமயத்தில் கொண்டுசெல்ல விழைந்தால் அதனால் ஏற்படக்கூடிய குழப்பங்கள், முட்டுக்கட்டைகள், பிரச்சினைகள் சம்பந்தமாக நாங்கள் சிந்திக்க வேண்டும்.

அரசியல் தீர்வுதான், ஒழுங்கு தான் எமக்கு முக்கியமான விடயமாக தற்போது இருக்கிறது. அக்கருமம் முறையாகக் கையாளப்பட்டு தீர்வுக்கு முதலிடம் கொடுக்கப்பட வேண்டும் என்று நாம் கருதுகிறோம்.

ஆட்சிமாற்றம் ஏற்பட்டதன் பின் பல மாற்றங்கள் இடம்பெற்றிருக்கின்றன. பல விடயங்கள் நடைபெற்று இருக்கின்றன. ஆட்சிமாற்றம் ஏற்படுவதற்கு முன் பழைய அரசாங்கத்துடன் நாம் பேச்சுவார்த்தை நடத்தினோம். அது தோல்வியில் முடிந்ததை நாம் எல்லோரும் அறிவோம்.

முன்னைய ஆட்சியாளர் காலத்தில் நாம் ஒரு கோரிக்கையை முன்வைத்த போதும் அதற்கு அவர்களிடமிருந்து காத்திரமான பதில் கிடைக்கவில்லை. இதன் காரணமாக பல பின்னடைவுகள் ஏற்பட்டன.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ நேரடியாக என்னைச் சந்தித்து பாராளுமன்ற தெரிவுக் குழுவிற்கு வாருங்கள். வந்து அங்கு கலந்துரையாடும்படி கேட்டார். நாங்கள் அவரின் கூற்றை மறுத்துப் போகவில்லை.

நான் அவரிடம் கூறினேன் எங்களுக்கும் உங்களுக்கும் இடையில் ஒரு இணக்கப்பாடு காணாத நிலையில் பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு நாங்கள் வந்து இணக்கப்பாடு காண்பது என்பது முடியாத விடயம் என்ற காரணத்தினால் தெரிவுக்குக் குழுவுக்கு நாம் வரப்போவதில்லையெனப் புறக்கணித்தோம்.

புதிய அரசு ஆட்சிக்கு வந்த பின்பு நடைபெறும் விடயங்கள் அனைவருக்கும் தெரியும். பாராளுமன்றம் அரசியல் நிர்ணய சபையாக மாற்றப்பட்டது. அதன் நிமித்தம் ஒரு நடவடிக்கைக்குழு அமைக்கப்பட்டு அத்துடன் ஆறு உபகுழுக்கள் அமைக்கப்பட்டு சில முக்கியமான விடயங்கள் பற்றி ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க மேற்படி குழுக்களுக்கு பொறுப்புக்கள் வழங்கப்பட்டன.

மேற்படி உபகுழுக்கள் கூடி தமக்கென ஒதுக்கப்பட்ட மனித உரிமைகள், நிதி, நீதி, பொதுச்சேவை, மத்திய அரசுக்கும் பிராந்தியத்துக்குமுள்ள உறவு முறைகள், சட்டம் ஒழுங்கு என்பன பற்றி கூடி ஆராய்ந்து தங்கள் அறிக்கைகளை நடவடிக்கைக் குழுவுக்கு சமர்ப்பித்து சில நாட்களுக்கு முன்பாக பிரதமர் பாராளுமன்றில் இடைக்கால அறிக்கையாக வெளியிட்டார்.

நடவடிக்கைக்குழு இதுவரை 45 தடவைகள் கூடியிருக்கின்றது. இக்குழுவில் பல விடயங்கள் பேசப்பட்டிருக்கின்றன. அதிகாரப்பகிர்வு, ஆட்சிமுறை, தேர்தல் முறை, சட்ட ஆக்கமுறை, நிர்வாகம், காணி, சட்டம் ஒழுங்கு, பொதுப்பாதுகாப்பு இத்தகைய பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டு சில விடயங்களில் தீர்மானம் எடுக்கப்பட்டிருக்கின்றது.

மூன்று விடயம் தொடர்பில் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. ஆனால் இறுதி முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை.மூன்றில் ஒன்று ஆட்சிமுறை ஒழுங்கு, இரண்டாவது சமயம் சம்பந்தமான நிலைமை, மூன்றாவது அலகு விடயம். இந்த மூன்று விடயங்களும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

எம்மைப் பொறுத்தவரை வட, கிழக்கு இணைப்புப் பற்றியும் பேசப்பட்டுள்ளது. இறுதி முடிவு காணப்படவில்லை. ஆனால் தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்றன.ஆட்சி ஒழுங்கு, சமயம் தொடர்பில் பல்வேறு மாதிரிகள் தயாரிக்கப்பட்டு (பல்வேறு வரைபுகள்) அது விடயம் தொடர்பில் கலந்துரையாடிக் கொண்டிருக்கின்றோம்.

உபகுழுக்களுக்கு பல்வேறு நிபுணர்குழு, ஆலோசனைக்குழுக்கள், ஆலோசனை வழங்கியுள்ளன. அவர்கள் தமது ஆலோசனைகளை உலக நாடுகளில் காணப்படும் மாதிரிகளை அனுபவங்களாகக் காட்டி உதவி வருகின்றார்கள்.பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நடவடிக்கைக்குழுவின் இடைக்கால அறிக்கையை எதிர்வரும் டிசம்பர் 10 ஆம் திகதி பாராளுமன்றில் சமர்ப்பிக்க எத்தனிக்கின்றார்.

ஆனால் பல கட்சித்தலைவர்களின் வேண்டுகோள் யாதெனில் இடைக்கால அறிக்கையை சமர்ப்பிப்பதற்கு முன் தமக்கொரு பிரதியை முன்கூட்டியே வழங்கும் படியும் அதன்பின் சிறிது காலதாமதத்துடன் பாராளுமன்றில் இடைக்கால அறிக்கையை சமர்ப்பிக்கும் படி கோரிக்கை விடுத்துள்ளனர்.

எனவே சில சமயங்களில் நடவடிக்கைக் குழுவின் இடைக்கால அறிக்கை இரண்டொரு தினங்கள் பிந்தலாம்.பிரதமரின் விருப்பப்படி நடவடிக் கைக் குழுவில், இற்றை வரை கலந்துரையாடப்பட்டட விடயங்கள், முன்வைக்கப்பட்டிருக்கின்ற வெவ்வேறு தயாரிப்புக்கள் ஆகியவற்றை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து அதன் அடிப்படையிலும் உபகுழுக்களின் அறிக்கையின் அடிப்படையிலும் தை மாதம் 9ம், 10ம், 11ம் (2017) விவாதம் ஆரம்பிக்கப்பட்டு அந்த விவாதம் தொடரலாம்.

அந்த விவாதம் தொடருமாயின் அவ்விவாதத்தின் முடிவில் அரசியல் சாசனம் சம்பந்தமாக அரசியல் சாசன சபை முடிவு எடுக்க வேண்டுமென்றும் அம்முடிவு எடுத்தபின் அம்முடிவு சாதகமாக இருக்குமாக இருந்தால் அது அமைச்சர் சபைக்குச் சென்று அமைச்சரவையின் அங்கீகாரத்தைப் பெற்ற பின்பு அமைச்சரவையினால் அவ்வரைவு பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படும்

பாராளுமன்றத்தில் அந்த வரைபு நாம் எதிர்பார்த்த வண்ணம் 2/3 பெரும்பான்மையால் நிறைவேற்றப்பட்டால் அது மக்களிடம் ஒரு சர்வஜன வாக்கெடுப்புக்கு விடப்பட்டு மக்களின் அங்கீகாரத்தைப்பெற்றால் அது நாட்டினுடைய அரசியல் சாசனமாக அமுல்படுத்தப்படும்.

இன்றைய கூட்டத்தில் திருகோணமலை மாவட்ட அபிவிருத்தி தொடர்பான கருத்துரையாடல்கள் இடம்பெற்று மாவட்டத்தின் பல்வேறு அபிவிருத்தி தொடர்பில் செயற்றிட்டங்கள் தீட்டப்படவேண்டும் எனவும் முடிவுகள் எடுக்கப்பட்டன.

– திருமலை நவம் –