ஐ.நா. தீர்மானத்தை அமுல்படுத்துவதற்கு அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் – மாவை சேனாதிராஜா

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை அமுல்படுத்துவதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா வலியுறுத்தினார்.

நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய அவர்

மேலும் கூறியவை வருமாறு:-
“தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் நடைபெற்ற சந்திப்பின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 16 எம்.பிக்களும் கோரிக்கை விடுத்தனர்.
விரைவில் பிரதமரைச் சந்தித்து பேச்சு நடத்தவுள்ளோம். அதன்போதும் இந்த விடயத்தை வலியுறுத்திக் கூறுவோம்.

எங்களுடைய தேசத்தை மீளக்கட்டியெழுப்பவும், பாதிக்கப்பட்ட மக்களின் தேவைகளை பூர்த்திசெய்வதற்கும் உரிய கடப்பாடு எமக்கிருக்கின்றது. ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் அமுல்படுத்தப்படும் என இலங்கை அரசு உறுதியளித்துள்ளது.

அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டும், கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும், காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் எனப் பல்வேறு விடயங்கள் அந்தத் தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளன. அவற்றை நிறைவேற்றுவதற்கு அரசு காத்திரமான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். அரசியல் காண்பதற்கு இன்னும் வேகமாக பயணிக்கவேண்டும்” – என்றார்.