சிறிலங்காவின் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் பதவி விலக வேண்டும் – எம்.ஏ.சுமந்திரன்

சிறிலங்காவின் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் பதவி விலக வேண்டும் என்று சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கோரிக்கை விடுத்தார்.

சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, மீள்குடியேற்ற அமைச்சின் மீதான வரவுசெலவுத் திட்ட ஒதுக்கீடுகள் குறித்த குழுநிலை விவாதத்தில் நேற்று உரையாற்றிய சுமந்திரன்,“அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் வேறு ஏதாவது அமைச்சுப் பதவியைப் பொறுப்பேற்றுக் கொண்டு, தமிழ் மக்களுக்கு சிறந்த சேவை வழங்கக் கூடியவரிடம் மீள்குடியேற்ற அமைச்சுப் பதவியை கையளிக்க வேண்டும்.

தமிழ் பெயரை வைத்துக் கொண்டு தமிழ் மக்களின் எதிர்காலத்தை பாதிக்கும் வகையில் தொடர்ந்தும் செயற்படுவதற்கு அவரை அனுமதிக்க முடியாது.

13ஆவது திருத்தச்சட்டம் தமிழ்த் தேசியப் பிரச்சினைக்குப் போதிய தீர்வினைக் கொண்டிருப்பதாக அமைச்சர் சுவாமிநாதன் அண்மையில் நடந்த கூட்டமொன்றில் கூறியிருக்கிறார்.

இதனைக் கூறுவதற்கு அவருக்கு என்ன தைரியம் உள்ளது? இதனைச் சொல்வதற்கு சுவாமிநாதன் யார்? இங்கு வந்து இப்படிக் கூறுவதற்கு மக்கள் உங்களைத் தெரிவுசெய்தார்களா?

புதிய அரசியலமைப்பை தயாரிப்பதற்கான வழிநடத்தல் குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளீர்கள். அப்படியாயின் ஏன் நாம் புதிய அரசியலமைப்பை தயாரிக்க வேண்டும்?

இவ்வாறான கேள்விகளை நீங்கள் உங்களுக்குள்ளேயே கேட்டுக் கொள்ள வேண்டும். சமூகத்துக்கு ஏற்படுத்தும் பாதிப்பை நீங்கள் உணரவில்லை.

வடக்கில் பொருத்து வீட்டுத் திட்டத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசியல் காரணங்களுக்காக எதிர்க்கிறது என அமைச்சர் சுவாமிநாதன் கூறியுள்ளார்.

அந்த அரசியல் காரணங்கள் என்ன என்பதை கூறுமாறு சவால் விடுக்கிறேன்.

வடக்கில், கூட்டமைப்பினால் முன்வைக்கப்பட்ட மாற்று வீட்டுத் திட்டம் ஏன் சாத்தியமில்லாதது ?” என்றும் கேள்வியெழுப்பினார்.