வடக்கிற்கான வீடமைப்பு – பாராளுமன்றில் சம்பந்தன் ஆக்ரோசம் .

முகாம்களைப்போல சிறிய வீடுகளை அமைப்பது தடுக்கப்பட வேண்டும், பாரபட்சம் இன்றி வடக்கிற்கு வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் இரா. சம்பந்தன் ஆக்ரோசமாக கருத்து வெளியிட்டார்.

நேற்று பாராளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

மேலும், 25000 வீடுகளைக் கட்டித் தருகின்றோம் என கூறினீர்கள் ஆனால் அவற்றை அமைத்து கொடுத்தீர்களா? ஏன் முகாம்களைப் போல் சிறிய வீடுகளை அமைக்கின்றீர்கள்?

வடக்கிற்கு மட்டும் ஏன் பணம் ஒதுக்காமல் பிடித்து வைத்து கொண்டிருக்கின்றீர்கள், ஏன் பார பட்சம் காட்டி வருகின்றீர்கள் எனவும் பல சரமாரியான கேள்விகளை சம்பந்தன் முன்வைத்தார்.

அவருடைய கேள்விகளுக்கு பிரதமர் பதில் அளிக்க முன்வந்த போது,

நாம் படிப்படியாக அதற்கான செயற்பாடுகளை முன்னெடுத்தே வருகின்றோம், அடுத்த வருடம் முதல் என்ன செய்ய வேண்டும் என நாம் திட்டமிட்டுள்ளோம்.

அனைவரும் இணைந்து பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்கின்றேன் உங்களது கோரிக்கைகளை அப்போது முன்வையுங்கள் அதன் படி அடுத்த செயல் முறைகளை முன்னெடுப்போம்.

ஏற்கனவே இராணுவமும் வீடுகளை அமைத்துள்ளது அது மக்களுக்கு கொடுக்கப்படும். ஏனைய வீடமைப்பு திட்டத்திற்கு நிதி ஒதுக்க முன்வருகின்றோம்.

எவரும் பயப்பட வேண்டாம் மக்களின் மீது வரி சுமத்தாமல் நாம் வீடமைப்புகளைச் சரிவர செய்து தருகின்றோம்.

இப்போது சுதந்திரமாக இருக்கின்றோம், கடந்த காலத்தை விட இப்போது வீடுகளை அமைத்துக் கொள்ள சரி சுதந்திரம் இருக்கின்றதே எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதில் அளித்தமை குறிப்பிடத்தக்கது.