சுலக்சன் , கஜனிற்கு அமைக்கப்படும் உருவச் சிலைகள் நீதி கோரும் வடிவில் அமைக்கப்பட வேண்டும் -மாவைசேனாதிராஜா

பொலிசாரினால் படுகொலை செய்யப்பட்ட பல்கலைக் கழக மாணவர்களான சுலக்சன் , கஜனிற்கு அமைக்கப்படும் உருவச் சிலைகள் நீதி கோரும் வடிவில் அமைக்கப்பட வேண்டும். என தமிழரசுக் கட்ணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை. சேனாதிராஜா தெரிவித்தார்.

யாழ். கொக்குவில் பகுதியில் 2016-10-20 அன்று பொலிசாரினால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட பல்கலைக் கழக மாணவர்களான சுலக்சன் , கஜன் ஆகியோரின் 45ம் நினைவு நாளினை முன்னிட்டு நேற்றுமுன் தினம் இரு வெட்டு வெளியீட்டு வைக்கப்பட்டதோடு வீதியும் திறந்து வைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வுகள் சுன்னாகத்தில் அமைந்துள்ள சுலக்சனின் இல்லத்தில் சுலக்சனின் சிறி ய தந்தையாரும் முன்னாள் போராளியுமான சிறி தலமையில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு இது தொடர்பில் அவர் மேலும் உரையாற்றுகையில். ,

பொலிசாரினால் அநியாயமாக படுகொலை செய்யப்பட்ட இரு மாணவர்களின் நினைவாக உருவான சிலை திறக்கவேண்டும் என உறவுகளால் கோரப்பட்டுள்ளது. இந்த இறந்துபோன பல்கலைக் கழக மாணவர்களான சுலக்சன் , கஜனிற்கு அமைக்கப்படும் உருவச் சிலைகள் நீதிகோரும் வடிவில் அமைக்கப்படவேண்டும்.

அவ்வாறு அமைக்கப்படும்போதே எதிர்காலத்தில் இதன் வரலாறும் பதியப்படும். குறித்த மாணவனின் மரணம் கொலைதான் என தகவல் வந்த போது நான் கிளிநொச்சியில் ஓர் நிகழ்வில் இருந்தேன். அதனை உடனடியாக நிறுத்திவிட்டு வைத்தியசாலைக்கு வந்தேன். அங்கு வைத்தியசாலை நிர்வாகத்துடன் தொடர்பு கொண்டு நிலமையை அறிந்தபோது அதிர்ந்தோம்.

அதன் பின்பே பிரேத அறையின் முன்பாக கூடியிருந்த உறவுகள் மாணவர்களிடம் சென்றேன். அவர்கள் கண்ணீர் சிந்தியவாறு எம்மிடம் கேள்விகளை எழுப்பினர். மக்கள் பிரதிநிதிகளான நீங்கள் என்ன செய்யப்போகின்றீர்கள் என கோரி நின்றனர். வைத்தியர் தெளிவாக கூறினார் ஒருவரின் உடலில் சூடுபட்ட தெளிவான அடையாளம் உண்டு

இவ்வாறு வைத்தியர் தெரிவித்த கருத்தினை உடனடியாக எமது கட்சித் தலைவர் இரா.சம்பந்தனூடாக ஜனாதிபதியிடம் கொண்டு சென்றேன். அந்த நேரம் திருகோணமலையில் இடம்பெற்ற ஓர் நிகழ்வில் ஜனாதிபதியுடன் கட்சித் தலைவர் இருந்தமையினால் உடன் தெரிவித்து அதற்கான ஏற்பாடுகளை செய்தார். அதன் விளைவாக உடனடியாக சிறிதுநேர இடைவெளியில் உடனடியாகவே என்னிடம் பொலிஸ்மா அதிபர் தொடர்பு கொண்டு விடயத்தை தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பில் பொலிசார் ஆரம்பத்தில் உண்மையை தெரிவிக்கவில்லையெனவும். அதனாலேயே விளைவு பாரதூரமானது அதனால் முல்லைத்தீவில் இருந்து ஓர் பொலிஸ்குழு நியமிக்கப்பட்டு நீதியான விசாரணை இடம்பெறும் என்றனர். இதன் பின்பு கடந்த ஒக்டோபர் 31ல் யாழிற்கு வந்த ஜனாதிபதியிடமும் இது தொடர்பில் சரியான தீர்வு வேண்டும் என கோரினேன். இருப்பினும் அன்றைய தினம் இம் மாணவர்களின் உறவுகளை யாழில் ஜனாதிபதி சந்திக்காது சென்றமை எனக்கு வருத்தமாகவேயுள்ளது.

இதேவேளை இக்கொலைகளிற்கு வழக்கு மட்டும் தீர்வாகாது. முழுமையான நீதி வேண்டும். இந்த நாட்டில் தற்போதும் தேவையற்ற காலத்தில் எழுந்தமானத்தில் துப்பாக்கிகளை பாவிக்கின்றமையின் விளைவுகளே இவை. அதேபோல் வழக்குகளிலும் பொலிசார் தாம் நினைத்தவற்றை அறிக்கையிட்டு தப்பமுடியாது் என்பதனையும் வெளிக்கொணரவேண்டும்.

இப்படியான மரணங்களிற்கு நீதி கிடைப்பதன் மூலமே ஏனைய லட்சக்கணக்கான மாணவர்களிற்கும் பொதுமக்களிற்கும் நிரந்தர தீர்வும் கிட்டும். எமது இன விடுதலைப்போரில் போது லட்சக்கணக்கான உயிர்களை நாம் இழந்தோம். ஆனால் தற்போது எல்லாம் ஓய்ந்தது எனக்கூறும் காலத்திலும் இவ்வாறான இழப்புக்கள் தொடர்வதனை அனுமதிக்க முடியாது.

இந்த மாணவர்களின் இழப்பிற்குப் பின்னர் எந்த உயிரும் போகாதவண்ணம் காக்கவேண்டும். அதற்காகவும் அனைவரும் உழைக்கவேண்டும். இந்தக் இழப்பின் பின்னரும் இது தான் எமது இனத்தின் நிலை என்பதனை சர்வதேசமும் உணரவேண்டும். எமக்காக குரல்கொடுக்கும் சர்வதேச அமைப்புக்கள் இவைதொடர்பிலும் கரிசணை கொள்ளவேண்டும் . என்றார்.