இராணுவம் மூலமான இடையூறுகளை விலக்கிக் கொள்ளுங்கள் பாராளுமன்றில் சிவமோகன் எம்.பி.

எமது பிராந்திய அபிவிருத்திகளில் அரசு அதிக அக்கறை காட்டாவிட்டாலும் பரவாயில்லை. எமது தமிழ் மக்கள் தாமாக மீண்டெழக்கூடியவர்கள். இராணுவம் மூலமான இடையூறுகளை விலக்கிக் கொள்ளுங்கள் அதுபோதும். இன்று முல்லை மாவட்டத்தில் எமது கடல் தொழிலை நிர்மூலமாக்கும் விதத்தில் வட்டுவாகல் பிரதேசத்தில் ஒரு சட்டவிரோத கடல் படை முகாம் விஸ்தரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

எமது மக்களின் காணிகள் அவை. எமது வாழ்வாதார மூலம் அது. எமது சுற்றுலாத்துறை மையம் அது. எத்தனை தடவைகள் சுட்டிக்காட்டி விட்டோம். பாதுகாப்பு அமைச்சுக்கு ஒட்டுமொத்த வழிகாட்டல்களை மேன்மைமிகு ஜனாதிபதி அவர்கள் செய்து வருகிறார்கள். அதேசமயம் ஒரு இன நல்லிணக்கம் ஏற்படுத்தப்பட வேண்டும்.

நாட்டு மக்கள் அனைவரும் சம உரிமை அனுபவிக்க வேண்டும் என இந்த அரசு கூறுகிறது. அதற்காக புதிய அரசியலமைப்பு வரைவில் ஈடுபட்டு வருகிறது. எமது முல்லை மாவட்டத்தில் இராணுவ அடக்குமுறையின் கீழ் மக்களின் காணிகளை அபகரித்தது சரிதானா என சிந்திக்க வேண்டும்.

இராணுவ பிரசன்னங்களை குறைத்து முல்லை மாவட்டத்தில் இராணுவம் அபகரித்த காணிகளை விடுவித்து மக்களை தாமாக வளர உதவுவீர்கள் எனில் உங்களை நம்பலாம். உங்கள் நல்லிணக்க முயற்சிகளை நீங்கள் தயார்செய்து வரும் அரசியல் யாப்பை வரைபை நம்பலாம்.

அல்லாதவிடத்து எம் மக்கள் எந்த அடிப்படையில் நல்லிணக்க அரசை நம்புவது? பேரினவாதிகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக ஒரு அரைகுறை அரசியலமைப்பு மாற்றத்தை தமிழர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டுமென எவரும் கருதிவிட கூடாது.

நாம் பல இலட்சம் உயிர்களை எமது உரிமைகளை வென்று கொள்வதற்காக இழந்தவர்கள். எமது இனப்பிரச்சினை தீராது எந்த ஒரு பிராந்திய அபிவிருத்தியும் சாத்தியப்படாது என உரையாற்றினார். வன்னி எம்.பி.சி.சிவமோகன் இராணுவத்தினரின் ஊடுருவல் பற்றி பேசும் போது குறுக்கிட்ட பிராந்திய அபிவிருத்தி அமைச்சர் சரத் பொன்சேகா அவர்கள் இராணுவத்தினரின் புகழ்பாடி பேசத்தொடங்கினார். அதை இடைநிறுத்தி இருவரும் பாராளுமன்றத்தில் சிறிது நேரம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்