புதிய அரசியலமைப்பு மாற்றம் தொடர்பாக – பிரதமர் ,எதிர்க்கட்சி தலைவர் மகிந்தவுடன் பேச்சு .

புதிய அரசியலமைப்பு மாற்றம் தொடர்பாக சிறீலங்காப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோர் சிறீலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ஷவைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளனர்.

பிரதமர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற இந்தச் சந்திப்பில் புதிய அரசியலமைப்பு மாற்றம் தொடர்பாக, மகிந்த ராஜபக்ஷவின் ஆதரவைப் பெறுவது குறித்துக் கலந்துரையாடப்பட்டது.

இக்கலந்துரையாடலின்போது சிறீலங்கா அரசாங்கம் அரசியலமைப்பு மாற்றம் குறித்து தனது கருத்தை முன்வைக்கவேண்டுமென முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மேலும், அரசாங்கத்தின் மனதில் உள்ளது என்னவென்று தெரியாது தான் எவ்வாறு கருத்து வெளியிடமுடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கு சிறீலங்கா சுதந்திரக்கட்சி தனது நிலைப்பாட்டை இன்னமும் வெளியிடவில்லையென ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

அதற்கு மகிந்த ராஜபக்ஷ, அரசாங்கத்தின் முக்கிய பங்காளிக்கட்சி இவ்வாறு தெரிவித்தால் தாம் எவ்வாறு கருத்தினை வெளியிடமுடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

இதன்போது, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் அரசியலமைப்பு மாற்றத்திற்கு மகிந்த தலைமையிலான கூட்டு எதிரணியினர் ஆதரவு தெரிவிக்கவேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.

இந்தச் சந்திப்பில் கூட்டு எதிரணியினரின் சார்பாக, நாடாளுமன்ற உறுப்பினர்களான தினேஸ் குணவர்த்தன, பந்துல குணவர்த்தன, விதுர விக்கிரமநாயக்க, லொகான் ரத்வத்த ஆகியோர் கலந்துகொண்டனர்.