வடக்கு, கிழக்குக்கு அப்பாலுள்ள விகாரையொன்றுக்கு சுமணரத்ன தேரரை மாற்றுங்கள் – சீ.யோகேஸ்வரன்

மட்டக்களப்பில் அடாவடியில் ஈடுபட்டு இனவாதத்தைப் பரப்பிவரும் அம்பிட்டிய சுமணரத்ன தேரரை அங்கிருந்து வெளியேற்றி வடக்கு, கிழக்குக்கு அப்பாலுள்ள விகாரையொன்றில் குடியேற்றுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான சீ.யோகேஸ்வரன் சபையில் வலியுறுத்தினார்.

நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற புத்தசாசன அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இந்த வலியுறுத்தலை விடுத்தார்.

“மட்டக்களப்பில் அடாவடியில் ஈடுபட்டுவரும் அம்பிட்டிய சுமணரத்ன தேரரை பொலிஸார் கைதுசெய்யவில்லை. காரணம், அங்கு மஹிந்தவின் நிகழ்ச்சி நிரல் அமுலில் இருந்து வருகின்றது.

குறித்த தேரருக்கு எதிராக மட்டக்களப்பிலுள்ள இந்துகுருமார்கள் ஆர்ப்பாட்டம் நடத்தப்போகின்றனர் எனப் போலியான தகவலை நீதிமன்றத்துக்கு வழங்கி, இந்துகுருமாரை மட்டக்களப்பு பொலிஸார் நீதிமன்றத்துக்கு அழைத்துள்ளனர்.இது திட்டமிட்ட செயலாகும்.

இப்படியானதொரு ஆர்ப்பாட்டத்தை நடத்துவதற்குத் திட்டமிட்டிருக்கவில்லை என்பதை நீதிமன்றத்தின் கவனத்துக்கு நாம் கொண்டு வந்தோம். நீதிவானும் அதை ஏற்றுக்கொண்டார்.

அடாவடியில் ஈடுபடும் நபரை கைதுசெய்யாமல் அமைதியாக இருக்கும் எம்மைக் குறிவைப்பது ஏன்? இந்துகுருமாரை நீதிமன்றத்தில் நிறுத்தும் நடவடிக்கை நடக்கின்றது. இது ஏற்றுக்கொள்ளமுடியாத நடவடிக்கை.
சுமணரத்ன தேரரின் செயற்பாட்டுக்கு எதிராக பலதரப்பினரும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.

அவரின் செயற்பாடுகள் ஏற்புடையதல்ல. எனவே, அவர் வடக்கு, கிழக்குக்கு அப்பாலுள்ள விகாரையொன்றுக்கு கொண்டு செல்வதற்கு நல்லாட்சி அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்” – என்றார்.