தமிழரைத் தாக்கியோரை தமிழ் நாட்டுக்குள் நுழைய விடாத ஜெயலலிதா – சீ.யோகேஸ்வரன்

எந்த இனம் தமிழ் இனத்தை தாக்கியதோ அந்த இனத்திற்கு தமிழ் நாட்டிற்குள் நுழைய இடம் வழங்கமாட்டேன் எனத் தடுத்தவர். அந்தளவு தமிழ் உணர்வுடன் தனது பணிகளை முன்னெடுத்து வந்தவர் ஜெயலலிதா அம்மையார் ஆகும் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு தமிழரசுக் கட்சியின் மண்முனை வடக்கு கிளையினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அஞ்சலி நிகழ்வு நேற்று(11) பிற்பகல் கல்லடி உப்போடை துளசி மண்டபத்தில் நடைபெற்ற போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், கடந்த காலத்தில் இந்த நாட்டில் தமிழ் மக்கள் திட்டமிட்ட வகையில் அழிக்கப்பட்ட போது இந்தியாவின் ஏனைய மாநிலங்கள் அதனைக் கண்டு கொள்ளவில்லை. ஆனால் எமது உறவுகள் தாக்கப்படுகின்றார்கள் எனத் தமிழ் நாடு கொதித்தெழுந்தது.

ஏழரைக் கோடி தமிழர்களைக் கொண்டிருக்கின்ற தமிழ் நாட்டில் எமது தமிழர்களுக்காக உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்த மாபெரும் தாய் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா என்றால் அது மிகையாகாது. அவர் கடந்த 1997 ஆம் ஆண்டு முதற் தடவையாக முதலமைச்சரானார். யுத்தம் நடைபெற்ற 2000 ஆம் ஆண்டு காலத்தில் அவர் சட்டமன்றத்தில் எதிர்க் கட்சியில் இருந்து கொண்டிருந்தார்.

தமிழக சட்ட சபையில் ஒரு பெண் எதிர்க் கட்சித் தலைவியாக இருந்தது தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவாகும். அவர் எந்த நேரத்தில் எவ்வாறான முடிவுகளை எடுப்பார் என்பதை யாராலும் கூற முடியாது. அவருடைய கட்சி அமைச்சர்கள் கூட அவர் முன்னால் நாணல் போல வளைந்துதான் நிற்பார்கள். அந்தளவிற்கு அவரிடம் ஆளுமையும் திறமைகளும் இருந்தன.

அதை நாங்கள் தழிழ் நாடு சென்றிருந்த போது மக்களிடமிருந்தும் அரசியல் பிரமுகர்களிடமிருந்தும் அறிந்து கொண்டோம். நான் பல தடவைகள் அவரை சந்திப்பதற்கு முயற்சிகளைச் செய்தும் ஒரு தடவை மாத்திரம் ஒரு மணித்தியாலம் அவரை சந்திப்பதற்கு எனக்கு சந்தர்ப்பம் கிடைத்தது.

முதலமைச்சர் ஜெயலலிதா தனது வாழ்க்கையில் பல துன்பங்களை அனுபவித்திருக்கின்றார். இந்திய சரித்திரத்தில் ஆட்சியிலிருக்கும் போதே சிறை வைக்கப்பட்டு பதவி பறிக்கப்பட்டவர் என்றால் அது ஜெயலலிதா அம்மையார் தான். அவர் சொத்துக் குவிப்பு வழக்கில் பதிவாகியிருந்தாலும் இன்று அவர் மண்ணில் புதைக்கப்பட்ட பின்பும் அவருடைய சொத்துகளுக்காக அவர் முன்னால் எத்தனை பேர் நின்று கொண்டிருக்கின்றார்கள் என்று பாருங்கள்.

சட்டத்தரணிகள்தான் நாட்டை சிறப்பாக ஆளுவார்கள் என்று நாங்கள் நினைக்கக் கூடாது. சட்டத்தரணியாக இல்லாவிட்டாலும் ஏழரைக் கோடி மக்களை சிறப்பாக ஆண்டவர் ஜெயலலிதா அம்மையாராவார். அதை அவர் சிறைக்குச் சென்ற பின்னரும் சிறையிலிருந்து மீண்டு வந்த பின்னரும் அவர் மறைந்த பின்னரும் காட்டியிருக்கின்றார். நீண்ட காலத்திற்குப் பின்னர் ஆட்சியை கைப்பற்றியதன் மூலம் நிரூபித்திருக்கின்றார். இவையெல்லாம் ஜெயலலிதா அம்மையாரின் சிறந்த ஆட்சித் திறனைக் காட்டி நிற்கின்றன.

எங்களது நாட்டில் நடைபெற்ற அழிவுகளை இனப் படுகொலை எனக் கூற எங்களுடைய அரசியல்வாதிகளே அஞ்சிய போது ஜெயலலிதா அம்மையார் அதை இனப் படுகொலை எனக் கூறியும் தமிழக சட்ட சபையில் பிரகடனம் செய்தும் காட்டினார்.

இலங்கையில் யுத்தம் முடிவடைந்த பின்னர் தமிழக முதலமைச்சராக பதவி வகித்த ஜெயலலிதா அம்மையார் அத்தருணத்தில் ரவிசங்கர்ஜியை எமது பகுதிகளுக்கு அனுப்பி நிலைமைகளை கேட்டறிந்து கொண்டார். இலங்கையில் எமது மக்களுக்கு நடந்த அநீதிகளை வெளியுலகிற்கு கூறியதோடு பொருளாதார தடையையும் ஏற்படுத்தினார்.

இலங்கை தமிழர்களின் பிரச்சினைக்கான தீர்வு தனித் தமிழீழம் என்று வலியுறுத்தியவர் ஜெயலலிதா அம்மையார். தமிழ் தேசிய கூட்டமைப்பு ஜெயலலிதாவை சந்திக்க பல தடவைகள் முயற்சிகளை மேற்கொண்டது. அவர் அந்த சந்தர்ப்பத்தினை எங்களுக்கு வழங்கவில்லை. அரசியல் செய்யும் ஒருவர் சுய நலத்தை விட வேண்டும். குடும்பத்துடன் அரசியல் செய்பவர்களினால் நீதியான முறையில் அரசியல் செய்ய முடியாது என்ற காரணத்தினால் தனது உறவுகளை துறந்து தனியாக இருந்து சிறந்த அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுத்தார்.

தமிழ் நாட்டில் ஸ்ரீரங்கத்தை இடிக்க வேண்டும் என்றும் தில்லை நடராஜர் கோயிலை இடிப்போம் என்றும் அரசியல் பேசிய நாஸ்திகர்களிடம் இருந்து நாட்டை மீட்டு ஆஸ்திக பெண்ணாகவும் சமயத்தினை மதிக்கும் பெண்ணாகவும் தமிழோடு சமயத்தினையும் பாதுகாத்த பெருமை மறைந்த அம்மா ஜெயலலிதாவையே சாரும்.

அவர் தமிழ் மக்களுக்கு பெருமை சேர்க்கும் வகையில் இந்தியாவின் பிரதமர் ஆவார் என எதிர்பார்த்தோம். அந்தக் கனவு நிறைவேறாமல் போய் விட்டது எனத் தெரிவித்தார்.