தமிழ்நாட்டு முதலமைச்சர்களை எதிரிகளாக கொண்டு அரசியல் செய்வது சிறுபிள்ளைத்தனமானது – சிறிநேசன்

தமிழ் நாட்டில் உள்ள முதலமைச்சர்களை ஒதுக்கி வைத்துவிட்டு அவர்களை எதிரிகளாக கொண்டு அரசியல்செய்வது என்பது சிறுபிள்ளைத்தனமான விடயமாகவே இருக்கும் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்துள்ளார்.

தமிழரசுக் கட்சியின் மண்முனை வடக்கு கிளையின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு கல்லடி, உப்போடை துளசி மண்டபத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு நேற்று(12) பிற்பகல் மறைந்த தமிழக முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதாவுக்கு அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றதுடன் இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு கூறியுள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

ராஜீவ் காந்தியின் படுகொலையின் பின்னரே தமிழர்களின் போராட்ட விடயங்களில் அவர் விலகி இருந்தார். எங்களை விலக்கி வைத்தும் இருந்தார்.

ஆனால் தமிழர்களின் ஆயுதப்போராட்டம் மௌனித்த பின்னர் தமிழர்கள் எதிர்கொண்ட துன்பங்களை பார்த்து அவருக்கு ஈழத்தமிழர்கள் மீது அக்கறை ஏற்பட்டது.

அதன் காரணமாக சட்டமன்றத்தில் ஈழத்தமிழர்கள் சார்பாக தீர்மானம் ஒன்றை அதிக வாக்குகளினால் வெற்றிபெறச் செய்து ஐக்கிய நாடுகள் சபைக்கு அனுப்பி வைத்தார்.

அவர் தனது இறுதிக்காலத்தில் தமிழ் மக்கள் மீது மிகுந்த அக்கறைகாட்டியவர். அதன் காரணமாகவே தமிழ் அரசியல் வாதிகள் அஞ்சலி செலுத்தவேண்டிய அவசியம் ஏற்பட்டது.

தமிழ்நாட்டில் உள்ள முதலமைச்சர்களை ஒதுக்கிவைத்து விட்டு அவர்களை எதிரிகளாக கொண்டு அரசியல் செய்வது என்பது சிறுபிள்ளைத்தனமான விடயமாகவே இருக்கும்.

எனவே தான் தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஈழத்தமிழர்கள் மீது காட்டிய அக்கறை விமர்சனத்திற்கு உள்ளானாலும் அவர் எங்களுக்காக இறுதிக் காலத்தில் அதிகளவில் குரல் கொடுத்துள்ளார்.

ஈழ தமிழ் மக்களுக்காக சர்வதேச ரீதியாகவும் அழுத்தங்களை விடுத்திருந்தார். மத்திய அரசாங்கத்திற்கும் அழுத்தங்களை மேற்கொண்டு வந்தார்.

தமிழ் நாட்டில் ஒரு புரட்சி தலைவியாக, பெண் தலைவியாக வரமுடியும் என்று நிரூபித்துக்காட்டியவர்.

மேலும் பூவோடு சேர்ந்த நாரும் மனம் தருவது போன்று தற்போது சின்னம்மா மறைந்த முதலமைச்சரின் இடத்திற்கு வரக்கூடிய நகர்வுகள் நடைபெற்றுவருகின்றன. தான் மட்டுமல்ல தனக்கு பின்னால் இன்னுமொரு பெண் வரமுடியும் என்று நிரூபித்த பெண்மணியாக ஜெயலலிதா காணப்படுகின்றார். என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.