மக்களையும் திருப்திப்படுத்தக்கூடிய வகையில் புதிய அரசியல் யாப்பு அமையும் – இரா.சம்பந்தன்

புதிய அரசியல் யாப்பானது அனைத்து மக்களையும் திருப்திப்படுத்தக்கூடிய வகையில் அமையும் என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

திருகோணமலை – சம்பூர் – நாவலடி பிரதான வீதியின் திருத்தப்பணிகள் நிறைவடைந்த நிலையில் அதனை பொதுமக்களிடம் கையளிக்கும் நிகழ்வு நாவலடிச்சந்தியில் நேற்று நடைபெற்றது இந்நிகழ்வில் பங்கேற்று உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், தற்போது நாட்டில் நல்லிணக்கம் மற்றும் புரிந்துணர்வு ஏற்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது. அதற்குக் காரணம் மக்களிடையே சமாதானம் மற்றும் நல்லிணக்கம் உருவாகவேண்டுமென்ற தேசிய அரசாங்கத்தின் கொள்கையே எனவும் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், நாட்டில் புதிய அரசியல் யாப்பானது நாடாளுமன்றதில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்படும் எனவும் தெரிவித்த அவர் குறித்த யாப்பானது அனைத்து மக்களினதும் அபிலாசைகள், பிரச்சனைகள் மற்றும் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றும்வகையில் அமையுமெனவும் குறிப்பாக அதனை சர்வஜன வாக்கெடுப்பின்மூலம் சகல மக்களினதும் விருப்புடன் நிறைவேற்றப்படவேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், நீண்ட கால யுத்தமானது நிறைவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதுடன், நாட்டில் தற்போது இரண்டு பிரதான கட்சிகளும் இணைந்து தேசிய அரசாங்மொன்றினை உருவாக்கியுள்ளதாகவும், இதனைக் குழப்புவதற்கு யாரும் முயற்சிக்கக்கூடாது எனவும் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன் நாட்டில் இதுவரை கொண்டுவரப்பட்ட எந்தவொரு அரசியல் யாப்பும் மக்களினதோ அல்லது அரசியல் கட்சிகளினதோ ஆதரவுடனோ நிறைவேற்றப்படவில்லையெனத் தெரிவித்த அவர், புதிய அரசியல் யாப்பானது மக்களின் அங்கீகாரத்துடனேயே நிறைவேற்றப்படவேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.