mavai-9554

மாவை சேனாதிராஜாவிடம் இராணுவப் புலனாய்வாளர்கள் விசாரணை !!!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜாவிடம் இராணுவப் புலனாய்வாளர்கள் விசாரணை மேற்கொண்டனர் என்று யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

“யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள மாவை சேனாதிராஜாவின் இல்லத்திற்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை மதியம் வாகனம் ஒன்றில் சிவில் உடையில் சென்ற குழுவினர் தம்மை இராணுவப் புலனாய்வாளர்கள் என்று அறிமுகப்படுத்தினர். நாடாளுமன்ற உறுப்பினரிடம் விசாரணை மேற்கொள்ளவேண்டும் என்று கூறினர்.

இதன்போது மாவை சேனாதிராஜா வீட்டில் இல்லாத காரணத்தால் இராணுவப் புலனாய்வாளர்கள் திரும்பிச் சென்றுள்ளனர். மீண்டும் அன்று மாலை வாகனத்தில் வந்த ஐவர் தம்மை இராணுவப் புலனாய்வாளர்கள் என்று அடையாளப்படுத்தினார்கள். நாடாளுமன்ற உறுப்பினரிடம் விசாரணைக்கு வந்ததாகத் தெரிவித்தனர்.

இதுதொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினருக்கு தகவல் வழங்கப்பட்டது. அருகில் உள்ள இல்லத்தில் இருந்து வருகை தந்த நாடாளுமன்ற உறுப்பினரிடம் இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை மேற்கொள்ள முற்பட்டனர். இதன்போது தனது பாதுகாவலரை அழைத்த நாடாளுமன்ற உறுப்பினர், யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு தகவல் வழங்குமாறு பணித்ததோடு குறித்த விடயம் தொடர்பாக சபாநாயகரின் அனுமதி அல்லது நீதிமன்ற உத்தரவின்றி எவ்வாறு விசாரணை மேற்கொள்ள முடியும் என்று வந்திருந்தவர்களிடம் வினவினார்.

இந்த நிலையில் சம்பவ இடத்துக்கு வருகை தந்த யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைக்காக வருகை தந்த இராணுவப் புலனாய்வாளர்களிடம், அவர்கள் பணியாற்றும் இராணுவ முகாம் போன்ற விவரங்களைக் கேட்டறிந்ததோடு, நாடாளுமன்ற உறுப்பினரை விசாரணை செய்வதாயின் உள்ள நடைமுறைகளைப் பின்பற்றவேண்டும் எனக் கூறி அவர்களைத் திருப்பி அனுப்பி வைத்தனர்” என்று கட்சியின் மூத்த உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

இதேவேளை, தமிழரசுக் கட்சியின் அலுவலகத்திற்குள் இராணுவ புலனாய்வாளர்கள் வந்து தம்மிடம் விசாரணை மேற்கொண்டனர் என்று நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.