ஒற்றையாட்சி மூலம் சமஷ்டி பண்புகளை பெறமுடியாது – டிலானுக்கு மாவை பதிலடி.

ஒற்றையாட்சி மூலம் சமஷ்டி பண்புகளை பெறமுடியாது. அதனை ஏற்றுக்கொள்ளவும் கூட்டமைப்பு தயாரில்லை என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பானது சமஷ்டி என்ற சொல்லில் தங்கியிருக்கக் கூடாது என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பேச்சாளர் டிலான் பெரேரா தெரிவித்திருந்த கருத்து தொடர்பாக, பதிலளிக்கும் வகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

13ஆவது திருத்தச் சட்டம் குறித்தோ மாகாண சபையின் அதிகாரங்கள் தொடர்பாகவோ பேசவேண்டிய தேவை கூட்டமைப்பிற்கு இல்லை. சமஷ்டி முறையிலான அரசியல் தீர்வு மற்றும் வடக்கு – கிழக்கு இணைப்பு போன்ற விடயங்கள் தொடர்பான கூட்டமைப்பின் நிலைப்பாட்டை ஏற்கனவே ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு தெளிவாக எடுத்துக்கூறியுள்ளோம். கட்சியின் தலைவர் அல்லாத எவருக்கும் பதில்கூற வேண்டிய கடப்பாடு கூட்டமைப்பிற்கு இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.