2017 ஆம் ஆண்டிலும் வெற்றிடங்கள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் – சி.வி.விக்னேஸ்வரன்

“2016 ஆம் ஆண்டு வடக்கில் காணப்பட்ட 2 ஆயிரத்து 55 வெற்றிடங்கள் நிரப்பட்டதைப் போல் 2017 ஆம் ஆண்டிலும் வெற்றிடங்கள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். அடுத்த ஆண்டு வெளிநாட்டு நிதியில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் வடக்கில் முன்னெடுக்கப்படும்.”

– இவ்வாறு வடக்கு மாகாண முதலமைச்சரும் வடக்கு மாகாண சபையின் நிதி அமைச்சருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

வடக்கு மாகாண சபையின் வரவு – செலவுத் திட்டத்தை சபையில் நேற்றுச் சமர்ப்பித்து உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

“எம் மக்களின் பல்வேறு இடப்பெயர்வுகள், மீள்குடியேற்றம் போன்ற சவால்களுக்கு முகம் கொடுத்துக் கொண்டே நீண்டகால இலக்குடன் கூடிய அபிவிருத்திப்பாதையை நோக்கி நாம் சென்றுகொண்டிருக்கின்றோம்” என்றும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.

“வடக்கு மாகாணத்தின் சமூக, பொருளாதார அபிவிருத்தி மற்றும் கலை, கலாசார விழுமியங்களை உள்வாங்கி மக்களுக்கான வாழ்வாதார நடவடிக்கைகளை அதிகரிக்கச் செய்து தேசிய ரீதியில் வடக்கு மாகாணம் குறிப்பிடத்தக்க பங்களிப்பை நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு வழங்கியுள்ளது” என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

“வடக்கு மாகாணத்திற்கு தேவைப்படும் ஆளணிகள் தொடர்பாக சேவைப்பிரமாணக்குறிப்புக்களைத் தயாரித்து மாகாண சபைக்குட்பட்ட வெற்றிடங்களை முறையே நிரப்புவது இன்றியமையாததாகும். அந்தவகையில் 2016ஆம் ஆண்டில் 2,005 வெற்றிடங்கள் பல்வேறு பதவிநிலைகளிலும் நிரப்பப்பட்டுள்ளன.

மிகுதியாகவுள்ள வெற்றிடங்கள் சம்பந்தமாக சேவைப் பிரமாணக்குறிப்புக்கள் மற்றும் ஆட்சேர்ப்புத்திட்டத்தை தயாரித்து அந்த வெற்றிடங்களையும் நிரப்புவதற்கு 2017இல் நடவடிக்கை எடுக்கப்படும். இதேவேளை,மத்திய அரசினது வெற்றிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகளை எடுக்கவேண்டிய தேவையும் உள்ளது.

எனவே, 2017ஆம் ஆண்டு மத்திய – மாகாண அரசுகளின் கீழ் இனங்காணப்பட்டுள்ள ஆளணிப்பற்றாக்குறையை நிவர்த்தி செய்வது இன்றியமையாததாகும்” என்றும் அவர் கூறினார்.

“வரவு செலவுத்திட்டத்தின் மூலமான நிதி ஏற்பாடுகளுக்கமைய சிறந்தமுறையில் அபிவிருத்தி நடவடிக்கைகளை பயனுறுதிமிக்கதாகவும், வினைத்திறனுடையதாகவும் நடைமுறைப்படுத்துவது இன்றியமையாததாகும். வரும் புத்தாண்டில் கூடிய வினைத்திறனுடன் எமது நடவடிக்கைகளைக் கொண்டு நடத்த யாவருடைய ஒத்துழைப்பையும் வேண்டி நிற்கின்றோம். உறுப்பினர்கள் பல தேவைகளை வலியுறுத்தி வருகின்றார்கள்.

அவை மிகக் கவனமாகப் பரிசீலிக்கப்பட்டு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும். முதலமைச்சரின் அமைச்சின் 2017ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் பின்னர் ஆராயப்படும்” என்று அவர் இதன்போது மேலும் தெரிவித்தார்.