முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழ் மக்கள் சிறுபான்மை இனமாக மாறும் நிலை ஏற்படும்- து.ரவிகரன் !

முல்லைத்தீவு மாவட்டத்தில் கூடிய விரைவில் தமிழ் மக்கள் சிறுபான்மை இனமாக மாறும் நிலை ஏற்படும் என வட மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் தெரிவித்துள்ளார்.

யாழில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், “முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழர்களை சிறுபான்மையாக்குவதற்கான அடித்தளங்கள் இடப்பட்டு வருகின்றன.

மக்களிருக்கும் நிலங்களை முல்லைத்தீவின் ஒரு தனிப் பிரதேச செயலர் பிரிவாக இணைத்து அந்த பகுதியை வெலி ஓயா பகுதி எனச் சொல்லிக் கொண்டு திட்டமிட்ட வகையிலான குடியேற்றங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

இவ்வாறான திட்டமிட்ட நடவடிக்கைகள் தொடருமானால் முல்லைத்தீவு மாவட்டம் கூடிய விரைவில் பெரும்பான்மையினரின் கைகளுக்கு பறிபோய், சிறுபான்மை இனமாகத் தமிழ் மக்கள் மாறும் நிலை உருவாகும்” என்றார்.