யாழ்.மாவட்ட கட்டளைத் தளபதி மகேஸ் சேனாநாயக்காவை நேரில் சந்தித்து பேசினார் மாவை சேனாதிராஜா .

காங்கேசன்துறை ஊறணிப்பகுதியின் கடல்கரைப் பிரதேசத்தினை மீனவர்களின் வாழ்வாதாரம் கருதி மீனவர்களின் பயன்பாட்டிற்காக அனுமதிக்புமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை.சோ.சேனாதிராஜா யாழ்.மாவட்ட கட்டளைத் தளபதி மகேஸ் சேனாநாயக்காவை நேரில் சந்தித்து வேண்டுகோள் விடுத்தார்.

பலாலி இராணுவ முகாமில் இடம்பெற்ற சந்திப்பின்போதே மேற்படி கோரிக்கையினை முன்வைத்துள்ளார்.

குறித்த சந்திப்பின்போது காங்கேசன்துறையை அண்டிய பகுதிகளின் வாழ்விடங்கள் விடுவிக்கப்பட்டபோதிலும் அவர்களின் தொழில் மையமான ஊறணிப்பகுதியின் கடல்கரைப் பிரதேசத்தினை தொடர்ந்தும் படையினரின் தனிக் கட்டுப்பாட்டிலேயே கானப்படுகின்றது. எனவே மீனவர்களின் வாழ்வாதாரம் கருதிஅப்பகுதிக் கடல் பிரதேசத்தினை மீனவர்களின் பயன்பாட்டிற்காக அனுமதிக்கும் பட்சத்திலேயே அவர்களிற்கான வாழ்வாதரம் உறுதிப்படுத்தப்படும்.

அதேபோன்று காங்கேசன்துறையில் உள்ள மாம்பிராஞ் , மாங்கொல்லைப் பகுதிகளில் உள்ள 120 ஏக்கர் நிலப்பரப்பினை விடுவிப்பதன் மூலம் 400 குடும்பங்கள் உடன் மீளக்குடியமர முடியும் . விடிவிக்கப்பட்ட தையிட்டிக் கிராமத்தின் எஞ்சிய சிறுபகுதியான வள்ளுவர்புரம் போன்றவை விடுவிக்கப்படுவதோடு மீனவர்களின் முக்கிய தொழில்புரி மையமாக விழங்கிய மயிலிட்டித் துறைமுகப் பகுதி விடுவிக்கப்பட்டாலே குடாநாட்டில் உள்ள முகாம்களின் அரைவாசியினை மூட முடியும்.

இதேபோல் பலாலி வடக்கில் விடுவிக்கப்பட்ட பிரதேச மக்கள் உடனடியாகவே தமது பகுதிகளை துப்பரவு செய்து வீடுகளையும் அமைத்து விட்டனர். ஆனால் குடியேறத் தயக்கம் காண்பிக்கின்றனர். இதற்கான காரணத்தினை நாம் ஆராய்ந்தபோது இப்பகுதியில் குடியமர வரும் 150 குடும்பங்களிலும் உள்ள மாணவச் சிறுவர்கள் அவர்களது கல்விக்காக 10 கிலோ மீற்றர் தூரம் அலையவேண்டியுள்ளது.

இருப்பினும் அவர்களின் இல்லங்களிற்கு அருகில் 400 மீற்றர் தூரத்தில் உள்ள மிகப் பெரும் பாடசாலை இராணுவத்தினரின் பிடியில் உள்ளது. இம் மாணவர்களின் நன்மை கருதி அப்பாடசாலையினை விடுவிக்க இராணுவத்தினர் முன்வரவேண்டும் போன்ற கோரிக்கைகளையும் நாடாளுமன்ற உறுப்பினர் முன்வைத்தார்.

இக்கோரிக்கைகள் தொடர்பில் சாதகமாக ஆராயப்பட்டு மீனவர்களின் வாழ்வாதாரத்திற்கும் மாணவர்களின் கல்விச் செயல்பாட்டிற்கும் விரைவில் வழிசமைக்கும் வகையில் பதிலளிப்பதாக கட்டளைத் தளபதி பதிலளித்துள்ளார்.