இலங்கையில் சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வை பெற்றுத்தரும் பொறுப்பும் இந்திய அரசாங்கத்திற்கு உள்ளது – சிவசக்தி ஆனந்தன்

இலங்கை – இந்திய ஒப்பந்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டிய பொறுப்பும், இலங்கையில் சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வை பெற்றுத்தரும் பொறுப்பும் இந்திய அரசாங்கத்திற்கு உள்ளதென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

மாற்றுத்திறன் உடையவர்களின் நலனைக் கருத்திற்கொண்டு ‘ஒளிரும் வாழ்வு’ அமைப்பின் புதுக்குடியிருப்பு பிரதேச காரியாலயம் நேற்று திறந்துவைக்கப்பட்டது. இந்நிகழ்வில் அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அத்தோடு, போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை செய்யவேண்டிய தேவைப்பாடும் இந்தியாவுக்கு உண்டென அவர் மேலும் தெரிவித்தார்.

அபிவிருத்தியிலும் சரி, அரசியல் தீர்விலும் சரி கடந்த அரசாங்கத்தைப் போலவே நல்லாட்சி அரசாங்கமும் தமிழ் மக்களை ஏமாற்றுவதற்கு முயற்சிப்பதாக தெரிவித்த சிவசக்தி ஆனந்தன், இதனை இனியும் அனுமதிக்க முடியாதென்றார். இந்நிலையில், நிரந்தர அரசியல் தீர்வே ஒட்டுமொத்த தமிழர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு வழிவகுக்கும் என்றும் அதற்கு இந்தியா உதவ வேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கேட்டுக்கொண்டார்.