ஒற்றையாட்சியா, சமஷ்டியா என்ற சொற்களால் பிரச்சினை ஏற்படுத்தாமல் தீர்வைக் காண்போம்.!

“புதிய அரசமைப்பில் ஒற்றையாட்சியா, சமஷ்டியா என்ற சொற்களால் பிரச்சினை ஏற்படுத்தாமல், எங்களுடைய – தமிழர்களுடைய நிலைக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில்தான் நாங்கள் செயற்படுவோம். அது அரசுக்கும் தெரியும். அதற்கு ஏற்றவாறுதான் தீர்வைக் காண்போம்.”
– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

புதிய அரசமைப்பில் ஒற்றையாட்சியா, சமஷ்டியா என்பது தொடர்பில் பெரிய பிரச்சினை இருப்பதாகத் தெரியவில்லை என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ‘இந்து’ நாளிதழுக்கு அளித்த செவ்வியில் தெரிவித்திருந்தார். இது தொடர்பில் சுமந்திரன் எம்.பி. மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“ஒற்றையாட்சியா, சமஷ்டியா என்பது தொடர்பில் நாம் பேசியுள்ளோம். சொற்களால் பிரச்சினையை ஏற்படுத்தவில்லை.

எங்களுக்கு என்ன வேண்டும் என்பது அரசுக்கு நன்றாகத் தெரியும். அதனைப் பிரதமர் தனது செவ்வியில் சொல்லியிருக்கின்றார். அதேவேளை, சொற்கள் பின்னர் பொருள்கோடல் கொடுக்கப்படும்போது அந்தச் சொற்கள் எங்களுடைய நிலைமைக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில்தான் நாங்கள் சொற்களைப் பிரயோகிப்போம். அதற்கு ஏற்ற விதமாகத்தான் பேச்சு நடக்கின்றது. இது இரண்டு பகுதிக்கும் தெரியும்.

ஒற்றையாட்சியா, சமஷ்டியா என்ற இரண்டு சொல் தவிர்ந்த வேறு ஒன்றும் இல்லை என்ற நிலைப்பாடு தவறானது. இந்தியாவை எடுத்துக்கொண்டால், அங்கு ஒற்றையாட்சி என்றும் சொல்லவில்லை, சமஷ்டி என்றும் சொல்லவில்லை. ஆனால், பெரியளவில் அதிகாரப் பகிர்வு இடம்பெற்றிருக்கின்றது.

அதற்காக நாம் எந்தவொரு சொல்லும் பாவிக்காமல் இருக்கப் போகின்றோம் என்று சொல்லவில்லை. சொற்களால் எங்களுடைய நிலைமைக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் நாங்கள் செயற்படுவோம். அது அரசுக்கும் தெரியும். அதற்கு ஏற்றவகையில்தான் தீர்வைக் காண்போம்” – என்றார்.