சீர்கேடுகள் நல்லாட்சியிலும் தொடர்வது வேதனையளிக்கின்றது – எஸ்.வியாழேந்திரன்

கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் தொடர்ந்த சட்ட சீர்கேடுகள் நல்லாட்சியிலும் தொடர்வது வேதனையளிக்கின்றதென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு பன்குடாவெளியில் உள்ள தனியாருக்கு சொந்தமான காணியில் அத்துமீறி நுழைந்து அடாவடியில் ஈடுபட்டிருந்த மட்டக்களப்பு மங்களராமய விஹாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரரை அங்கிருந்து வெளியேற்றுமாறு பொலிஸாரிடம் வியாழேந்திரன் கோரிக்கை விடுத்திருந்தார். எனினும், வியாழேந்திரன் தமக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்ததாக சுமணரத்ன தேரர் பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார்.

இதுகுறித்து சனிக்கிழமைபொலிஸ் நிலையம் சென்று வாக்குமூலம் வழங்கிய வியாழேந்திரன் அதன் பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்துள்ளார்.

சுமணரத்ன தேரரை கைது செய்யும் விடயத்தில் சட்டம் உரிய முறையில் நிலைநாட்டப்படவில்லையென வியாழேந்திரன் இதன்போது தெரிவித்துள்ளார்.