த.தே. கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கிடையிலான விசேட கலந்துரையாடல் ஜனவரி 8ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளது.

புதிய அரசமைப்பு தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கிடையிலான விசேட கலந்துரையாடல் ஜனவரி 8ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளது.

கட்சித் தலைவரான இரா.சம்பந்தன் எம்.பி. தலைமையில் நடைபெறும் இந்தச் சந்திப்பில் அனைத்து எம்.பிக்களும் கட்டாயம் பங்கேற்க வேண்டும் எனப் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

புதிய அரசமைப்பு குறித்தும், உபகுழுக்களின் அறிக்கை மீதான மூன்று நாட்கள் விவாதம் பற்றியும் இதன்போது விசேடமாகவும் – விரிவாகவும் ஆராயப்படவுள்ளன என்று கூட்டமைப்பு வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது.

2017ஆம் ஆண்டுக்கான முதலாவது நாடாளுமன்ற அமர்வு ஜனவரி 9ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
அன்றைய தினம் அரசமைப்பு தயாரிப்பு பணிக்காக அரசமைப்புச் சபையின் வழிநடத்தும் குழுவினால் நியமிக்கப்பட்ட உப குழுக்களின் 7 அறிக்கைகள் மீதான விவாதம் ஆரம்பமாகி அது 11ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது.

நாடாளுமன்ற அமர்வு கூடுவதற்கு முன்னர் அரசமைப்புச் சபையின் வழிநடத்தும் குழு 6, 7ஆம் திகதிகளில்கூடி அரசமைப்புத் தயாரிப்பு பணிகள் சம்பந்தமாக பேச்சு நடத்தவுள்ளது. அதன் பின்னர் நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் தலைவர்களுக்கான கூட்டமும் சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் நடைபெறவுள்ளது.

இவ்வாறானதொரு பின்புலத்திலேயே புதிய அரசமைப்பு, சமகால அரசியல் நிலைவரங்கள் சம்பந்தமாக பேசுவதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழு 8ஆம் திகதி கூடவுள்ளது.