மக்களுக்குக் கல் வீடா, பொருத்து வீடா வேண்டும் என்று மக்களே சொல்லட்டும் – திணிக்கவேண்டாம் .

“மக்களுக்குக் கல் வீடா, பொருத்து வீடா வேண்டும் என்ற தெரிவைக் கொடுக்காமல், வீடு தேவை என்றால் பொருத்து வீட்டைப் பெற்றுக்கொள்ளுங்கள் என்ற திணிப்பை – அழுத்தத்தை மேற்கொள்வதற்காகத்தான், அமைச்சர் சுவாமிநாதன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளையும் அழைக்காமல் தனித்து மக்களைச் சந்திக்க முயற்சிக்கின்றார் என்று சந்தேகிக்கின்றோம்.”

– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

யாழ். மாவட்டச் செயலகக் கேட் போர் கூடத்தில் இன்று (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு, மீள்குடியேற்ற அமைச்சின் ஏற்பாட்டில் அமைச்சர் சுவாமிநாதன் பொதுமக்களைச் சந்திக்கவுள்ளார். இந்தச் சந்திப்புக்கான அழைப்பு கூட்டமைப்புக்குக் வழங்கப்படவில்லை –

“மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதன் பல மடங்கு விலையான தற்காலிக வீட்டைத்தான் மக்களுக்கு வழங்கவேண்டும் என்பதில் விடாப்பிடியாக நிற்கின்றார். இதற்குப் பின்னால் மிகப் பெரிய ஊழல் இருக்கின்றது என்று நாங்கள் சந்தேகிக்கின்றோம். இல்லாவிடின் 8 இலட்சம் ரூபாவுக் குக் கல் வீட்டை முழுமையாகக் கட்டக் கூடியதாக இருக்கும்போது, அந்தப் பெறுமதியை விட இரண்டு அல்லது மூன்று மடங்கு பெறுமதியில் உலோக வீட்டைக் கொடுக்க நினைப்பது ஏன் ?

இரண்டு கல் வீடு கட்டும் பெறுமதியில் ஒரு உலோக வீட்டைக் கொடுப் பதில் நியாயமில்லை. மக்களுக்கு வீடு வேண்டும். அதில் எந்த மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை. மக்களை அழைத்து அவர்களுக்கு வீடு வேண்டுமா என்று கேட்டால் சகலரும் ‘ஓம்’ என்றுதான் பதிலளிப்பார்கள். இன்று மக்களை அழைத்து அமைச்சர் சுவாமிநாதன் பொருத்து வீடா அல்லது கல் வீடா வேண்டும் என்று கேட்கப் போவதில்லை. கல் வீடு வேண்டும் என்று கேட்டால் மக்கள் எல்லோரும் கல் வீடுதான் வேண்டும் என்பார்கள். மக்களிடம் நாங்கள் பேசியுள்ளோம்.
இன்று நடைபெறும் கலந்துரையாடலில் மக்களிடம் கல் வீடு வேண்டுமா ? பொருத்து வீடு வேண்டுமா? என்று தெளிவாகக் கேட்க வேண்டும். அப்படிக் கேட்காமல் – மக்களுக்குத் தெரிவைக் கொடுக்காமல், வீடு வேண்டும் என்றால் பொருத்து வீட்டைப் பெற்றுக்கொள்ளுங்கள் என்று சொல்வதற்காகத்தான், எங்களையும் அழைக்காமல் மக்களைத் தனியாகச் சந்திக்க அமைச்சர் சுவாமிநாதன் முயற்சிக்கின்றார் என்று நாங்கள் சந்தேகிக்கின்றோம்” .