ஒற்றையாட்சிக்கு இணங்கமாட்டோம்!!

நாடு ஒன்றாக இருப்பதற்கு இணங்கினோமே தவிர ஒற்றையாட்சிக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒருபோதும் இணங்கவில்லை. ஒற்றையாட்சிக்குள் கிடைக்கும் தீர்வை ஒருபோதும் ஏற்கமாட்டோம் என்று கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், தெரிவித்துள்ளார்.

மொறட்டுவை பல்கலைக்கழகத்தின் தமிழ் மாணவர் இலக்கிய மன்றத்தின் ஏற்பாட்டில், கொழும்பு இராமகிருஷ்ண மண்டபத்தில் நடைபெற்ற ‘தமிழருவி – 2016′ கலைநிகழ்ச்சியில் அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

சமஷ்டி மற்றும் ஒற்றையாட்சி போன்ற சொல்லாடல்கள் மாத்திரம் எப்படியான ஆட்சிமுறை இருக்கின்றதென தீர்மானித்துவிட முடியாது. ஆனால், சொல்லிலும் கவனமாகவே செயற்படுகின்றோம். பொருள் கோடலிலே எந்தவித தவறும் இழைக்கப்படாத வகையில் அரசியல் யாப்பு இருக்க வேண்டும். அதுவே தீர்வாக அமையும்.

தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வில் எவ்வித விட்டுக்கொடுப்பிற்கும் இடமில்லை. மக்களின் ஆணையிலே என்னென்ன விடயங்கள் இருக்கின்றனவோ அத்தனை விடயங்களும் அரசியல் யாப்பில் இருந்தால் மாத்திரமே அதனை ஏற்போம். தனி நாடு கோரிக்கையை தவிர வேறெந்த விட்டுக்கொடுப்பிற்கும் இணங்கவில்லையெனவும் அவர் குறிப்பிட்டார்.