பெருமளவிலான அரசகாணிகள் அபகரிக்கப்பட்டு வருகின்றன – சி.வி.விக்னேஸ்வரன்

அரசியல் தலையீடுகளினால் வட மாகாண சபையின் கவனத்திற்கு கொண்டுவரப்படாமல் பெருமளவிலான அரசகாணிகள் அபகரிக்கப்பட்டு வருவதாக வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குற்றம் சுமத்தியுள்ளார்.

வடமாகாண சபையின் அடுத்து வருடத்திற்கான வரவு செலவுத்திட்டத்தின் முதலமைச்சரின் அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பிலான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் வடக்கில் பெருமளவிலான காணிகளை இராணுவத்தினர் தம்வசம் வைத்துள்ள நிலையில், தற்போது அரச காணிகளையும் சட்டரீதியாக தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அரச காணிகள் மட்டுமல்லாமல் , பெருமளவிலான தனியார் காணிகளும், படையினரின் கட்டுப்பாட்டினுள் கொண்டுவரப்பட்டுள்ளதோடு, அவற்றை விடுவித்துக் கொள்ள முடியாத நிலைமை காணப்படுகிறது. எனவே இது தொடர்பில் மத்திய அரசிற்கு அடிக்கடி அழுத்தம் கொடுக்க வேண்டியநிலை ஏற்பட்டுள்ளது என முதலமைச்சர் தெரிவித்தார்.