வடக்கு மாகாண சபையினால் முஸ்லிம்கள் புறக்கணிக்கப்படுகின்றனர் எனும் குற்றச்சாட்டை முதலமைச்சர் மறுத்துள்ளார்.

வடக்கு மாகாண சபையினால் முஸ்லிம் மக்கள் புறக்கணிக்கப்படுகின்றனர் என்ற குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

முஸ்லிம் மக்கள் மீள்குடியேறுவதற்கு எந்த நடவடிக்கையும் முதலமைச்சருடைய அமைச்சு எடுக்கவில்லை எனவும் முஸ்லிம் மக்களுக்கான காணிகளையும் வடக்கு மாகாண சபை வழங்கவில்லை எனவும் வடமாகாண உறுப்பினர் அஸ்மின் நேற்று முன்தினம் இடம்பெற்ற வடமாகாண சபை அமர்வின் போது குற்றச்சாட்டு முன்வைத்திருந்தார்.

இதற்கு நேற்றைய தின அமர்வில் பதிலளிக்கையிலேயே முதலமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண சபை உருவாக்கப்பட்ட 2013ஆம் ஆண்டிலிருந்து இதுவரை கிட்டத்தட்ட மூயாயிரம் முஸ்லிம் மக்களுக்கு வடக்கு மாகாண சபையால் காணி உறுதி பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன எனவும் இந்தளவிலான பாரிய தொகை தமிழ், சிங்கள மக்களுக்கு கூட அதிகளவில் வழங்கவில்லை எனவும் தெரிவித்த முதலமைச்சர் இவ்வாறிருக்க முஸ்லிம் மக்களை வடக்கு மாகாண சபை புறக்கணிக்கின்றது என்ற குற்றச்சாட்டு ஏற்றுக்கொள்ள முடியாததாகும் எனத் தெரிவித்துள்ளார்.