இலங்கை அரசாங்கத்தின் தீர்ப்புக்களின் மீது நாங்கள் திருப்தி கொள்ளவில்லை!!

ஜோசப் பரராஜசிங்கத்தின் வழக்கு 10 ஆண்டுகளுக்குப் பின்னர் விசாரணைக்கு எடுக்கப்பட்டாலும் இலங்கை அரசாங்கத்தின் தீர்ப்புக்களின் மீது நாங்கள் திருப்தி கொள்ளவில்லை என தமிழரசுக் கட்சியின் தலைவரும் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் 11ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று மாலை மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் தமிழரசுக்கட்சியின் இளைஞர் அணித் தலைவர் கி. ஜோன் தலைமையில் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே இதை கூறினார். தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

தமிழரசுக் கட்சி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த இளைஞர்கள், எங்களோடு கூடவே இருந்து வழிகாட்டியாகவும் தலைவனாகவும், போராளியாகவும் நண்பனாகவும்

இருந்த ஜோசப் பரராஜசிங்கம், பிரார்த்தனை ஒப்புக் கொடுக்கின்ற புனிதமான தினத்திலே நேரத்திலேயே கொல்லப்பட்டார்.

அவருக்கு அஞ்சலி செலுத்த இதுவே இது உகந்த நாள். புத்தாண்டு வாழ்த்துக்களையும் இந்த நாளிலே எஞ்சியிருக்கும் நம்மவர்களுக்குத் தெரிவித்துக் கொள்ள வேண்டும்.

அழிக்கப்பட்ட தினத்திலும் மக்கள் பீனிக்ஸ் பறவைகள் போல எழுந்து நிற்கிறார்கள். என்ன இலட்சியத்துக்காக இலட்சக் கணக்கான உயிர்கள் பலி கொடுக்கப்பட்டனவோ அந்த ஆத்மாக்களுடைய பலம் எங்களுக்கு எப்போதும் இருந்து கொண்டேயிருக்கிறது.

எந்த இலட்சியத்துக்காக போராடினார்களோ அதற்காக நாங்கள் மீண்டும் எழுந்து கொண்டிருக்கின்றோம். என்னைப் பொறுத்த வரையில் நானும் 3 முறை இறந்து விட்டேன் என்று தூக்கி வீசப்பட்டவன்தான்.

அண்மையிலே நாரந்தன்னை வழக்கு 14 ஆண்டுகளுக்குப் பிறகு, குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டிருக்கின்றது. நாங்கள் இறந்து விட்டோம் என்றுதான் மருத்துவ மனைக்குக் கொண்டு வந்தார்கள்.

நாலாம் மாடியிலே நான் மூர்ச்சித்து வீழ்ந்த பொழுது மரணித்து விட்டேன் என்று கூறிவிட்டார்கள்.

மூன்றாவதாக ஆனையிறவு இராணுவ முகாமிலும் நான் மரணித்து விட்டேன் என்று தூக்கி வீசப்பட்டேன். இவை சிறிய சம்பவங்கள்தான்.

எங்களுடைய மக்கள் தங்களுடைய உயிர்களைப் பலி கொடுத்து இத்தனை ஆண்டுகளாக இனத்தின் விடுதலைக்காக தங்களை அர்ப்பணித்த சூழலோடு ஒப்பிடுகின்ற பொழுது என்னுடைய உயிர் மீண்டும் தப்பியிருக்கக் கூடியது பெரிய அர்ப்பணம் என்று கூற வரவில்லை.

தமிழர் தாயகத்தின் அழகான மண்ணிலே நாம் ஆக்கிரமிக்கப்பட்டவர்களாக அடக்கி ஒடுக்கப்பட்டவர்களாக இருப்பதற்கு எதிராக தந்தை செல்வாவோடு, அமிர்தலிங்கம் அவர்களோடு,தமிழரசுக்கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்போடு தன்னை இளவயதிலிருந்து இணைத்துக் கொண்டு போராட்டங்களிலும் மகாநாடுகளிலும் கலந்து கொண்டு தீர்மானங்கள் எடுப்பதிலெல்லாம் பங்குபற்றி வந்தவர்தான் ஜோசப் பரராஜசிங்கம்.

எங்களோடு உழைத்த பலர் இப்பொழுது எம்மிடையே இல்லை. இலட்சியத்துக்காக இனத்தின் விடுதலைக்காக ஜனநாயகத்துக்காக எமது இளைஞர் சமுதாயம் இந்த மண்ணிலே இருந்து வந்திருக்கின்றது.

ஜோசப் பரராஜசிங்கம் மனித உரிமைகளுக்காக இராணுவ, அரச படுகொலைகளுக்கு எதிராக நாடாளுமன்றத்திலும் அதற்கு வெளியிலும் குரல் கொடுத்தார். பல நாடுகளுக்குச் சென்று பல தூதர்களிடம் குரல் கொடுத்திருக்கின்றார். கட்சியின் ஏகோபித்த தீர்மானத்தில் ஒன்று பட்டுழைத்தவர். கட்சியின் பண்பைக் கட்டிக் காத்தவர்.

தன்னுடைய வாழ்நாள் முழுவதையும் நம்முடைய இனத்தின் விடுதலைக்காக உழைத்தவர்.

குற்றவாளிகளினால் சுட்டுக் கொல்லப்பட்ட அவரின் வழக்கு 10 ஆண்டுகளுக்குப் பிறகு எடுக்கப்பட்டிருக்கின்றது.

தனித்தனியாக, கூட்டமாக எமது மக்கள் படுகொலை செய்யப்பட்ட வழக்குகளில் இலங்கை அரசாங்கத்தின் தீர்ப்புக்களின் மீது நாங்கள் திருப்தி கொள்ளவில்லை. அதனால் இன்னமும் நாங்கள் கவலையடைந்திருக்கின்றோம்.

பழைய தீர்ப்புக்கள் இலங்கையின் நீதித்துறையை கேள்விக் குள்ளாக்கியிருக்கின்றது. இரத்தத்தில் இந்த மக்களின் உணர்வு இன்னமும் அதிகரித்துக் கொண்டுதானிருக்கின்றது என்றார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன், சா.வியாளேந்திரன், கே.கோடீஸ்வரன், மற்றும் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராசசிங்கம், கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான கோ.கருணாகரம், பி.இந்திரகுமார், மா.நடராசா, ஞா.கிருஸ்ணபிள்ளை, த.கலையரசன் உள்ளிட்ட கட்சியின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலர் இதில் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது படுகொலை செய்யப்பட்ட மாமனிதர் யோசப் பரராசசிங்கத்தின் திருவுருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து ஈகைச் சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டன.

கடந்த 2005ஆம் ஆண்டு கிறிஸ்மஸ் தினத்தன்று மட்டக்களப்பு புளியந்தீவு தேவாலயத்தில் வழிபாடுகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது இனந்தெரியாத நபர்களினால் யோசப் பரராசசிங்கம் சுட்டு படுகொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.