நீதித்துறையில் எனக்கு நம்பிக்கை இல்லை – எம்.ஏ.சுமந்திரன்

நாட்டின் தலைநகரில் பட்டப்பகலில் கொல்லப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா – ரவிராஜின் கொலைக்குப் பொறுப்பானவர்களை தண்டிக்க முடியாததொன்றாக இருப்பது இலங்கை நீதித்துறையில் எனக்கு நம்பிக்கை இல்லை என்பதை உறுதி செய்கின்றது என த.தே.கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரும் குறித்த வழக்கில் பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் ஆஜரான சிரேஸ்ட சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

மேலும் நீதித்துறை மட்டுமல்ல, மத்திய அரசாங்கமாக இருந்துகொண்டு ஒற்றையாட்சி முறையின் கீழே நிறைவேற்றுத்துறை முழுமையாக மத்தியிலே இருக்கின்ற முறையிலும் எங்களுக்கு நம்பிக்கையில்லை. சட்டவாக்கத்துறையிலே மத்திய அரசாங்கத்தில் இருக்கின்ற பாராளுமன்றம் மட்டும் சட்டங்களை இயற்றுவதில் மேலாதிக்கம் செலுத்துவதிலும் எங்களுக்கு நம்பிக்கையில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

நேற்று வடமராட்சிப் பகுதியில் நடைபெற்ற கலாசார விழாவொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவித்துள்ளதாவது,

நேற்று அதிகாலை 12 மணிக்குப் பிறகு முன்னாள் பா.உ. ரவிராஜ் படுகொலை வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இறுதிச் சமர்ப்பணங்கள் செய்யப்படுகின்ற வேளையில் அவரது குடும்பத்தார் சார்பில் ஆஜராகி நானும் இறுதிச் சமர்ப்பணங்கள் செய்திருந்தேன். சிங்கள மொழி பேசும் ஜூரி சபை முன்னிலையில் குறித்த வழக்கு நடைபெற்றது. ஜூரி சபை முன்னிலையில் வழக்கு எடுத்துக்கொள்ளப்பட வேண்டுமென குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் விண்ணப்பித்த போது பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக நான் எதிர்த்து வாதிட்டேன். அது தொடர்பில் எழுத்து மூலமான சமர்ப்பணங்களும் நீதிமன்றத்திற்குச் செய்திருந்தோம்.

இந்நிலையில் ஜூரி சபையினாலே நேற்று அதிகாலை குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் அனைவரும் நிரபராதிகள் என்று தீர்ப்பு ஏகமனதாகக் கொடுக்கப்பட்டுள்ளது. அது நீதிமன்றத் தீர்ப்பு.

இதேவேளை வழக்கு நடைபெறுகின்ற காலத்திலே அந்த வழக்கைப் பற்றியோ அதன் தீர்ப்பைப் பற்றியோ எவரும் பேசக்கூடாது. பேசினால் அது நீதிமன்றத்தை அவமதிக்கின்ற குற்றமாகக் கருதப்படும். ஆனால் தீர்ப்புக்கொடுத்ததற்குப் பிறகு எவரும் அதனை விமர்சிக்கலாம்.

நேற்று முன்தினம் நீதிமன்றத்திலே நான் ஆற்றிய சமர்ப்பணத்திலே சில விடயங்களை அந்த ஜூரிசபைக்கு சுட்டிக்காட்டியிருந்தேன். 10 வருடங்களுக்கு முன் இலங்கையின் தலைநகரிலே காலை 8.40 மணிக்கு மக்கள் வேலைக்குச் செல்கின்ற சன நெருக்கடியான ஒரு வேளையிலே தெட்டத் தெளிவாக அனைவருக்கும் தெரியக்கூடிய நேரத்திலே பா.உறுப்பினர் ஒரு பிரதான வீதியின் நடுவிலே சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

ஆனால் அது தொடர்பாக அதற்குப் பிறகு 9 வருடங்களுக்கு மேல் ஒருவர் கூட கைது செய்யப்படவில்லை. இடையில் ஒருவர் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளார். ஆனால் இவர்கள் தான் இந்தக் குற்றத்தைப் புரிந்தவர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் நீதிமன்றின் முன்னால் நிறுத்தப்படுவதற்கு 9 வருடங்களும் வழக்கு ஆரம்பிப்பதற்கு 10 வருடங்களும் காத்திருக்க வுண்டியிருந்தது.

இந்த வருடம் கடந்த நவம்பர் 22ம் திகதி தான் இந்த வழக்கு ஆரம்பமாகியது. அதுவரைக்கும் நாங்கள் பொறுத்திருந்தோம். ஆனால் இந்த வழக்கில் கூட குற்றப்பத்திரிகையிலே ஆறு பேரை எதிரிகளாக இனங்கண்டு நிறுத்தியிருந்தார்கள்.

வழக்கு ஆரம்பமானபோது முதலாம் எதிரி ஏற்கனவே இறந்து விட்டார் என்று அறிவித்தார்கள். மிகுதி 5 பேரிலும் இருவர் இன்னமும் தேடப்படுகிறார்கள். மூவர் மட்டும் எதிரிக் கூண்டில் நின்றார்கள் என குற்றப்பத்திரிகையில் சொல்லப்படுகின்றது.

இந்த 6 பேருடன் சட்டமா அதிபருக்குத் தெரியாத வேறு சிலரும் சேர்ந்து தான் இக்கொலைத் திட்டத்தை தீட்டினார்கள் என்று குற்றப்பத்திரிகையிலே கூறப்பட்டிருக்கிறது.

இலங்கை எகுடியரசுக்குத் தெரியாத வேறு சிலர் இன்னமும் தெரியாத வேறு சிலர் இக்கொலையைச் செய்வதற்குத் திட்டம் தீட்டியிருந்தார்கள் என்று சட்டமா அதிபரின் குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதை மேற்கோள்காட்டி நான் கூறினேன். பா.உறுப்பினர் ஒருவரை அவ்வாறான வெளிச்சத்தில் மக்கள் மத்தியில் கொலை செய்துவிட்டு ஒருவரும் கைது செய்யப்படாமல் 9 வருடங்களுக்கு மேலாக இந்நாடு இருந்தது. ஆகவே இந்தத் திட்டம் தீட்டியவர்கள் இதற்கு உத்தரவு கொடுத்தவர்கள் யார் என்பது கண்டுபிடிக்கப்பட வேண்டும். இது எங்களுக்குத் தெரியாது. யாரோ செய்திருக்கிறார்கள் என்று சட்டமா அதிபர் சொல்வதில் அர்த்தம் கிடையாது.

அவர்கள் கண்டு பிடிக்கப்பட்டு அவர்கள் சட்டத்திற்கு முன்பாக கொண்டுவரப்பட வேண்டும். ஆனால் தற்போதைக்கு அந்த உத்தரவை நடத்தியவர்கள் இவர்கள் தான் என்று இலங்கை அரசே நீதிமன்றத்திற்கு முன்பாக நிறுத்தியிருக்கின்றது. அந்த வகையில் அவர்களும் முழுமையான பொறுப்பாளிகள். அவர்களுக்கும் இப்போது தண்டனை கொடுக்கப்பட வேண்டும் என்று நான் கூறியிருந்தேன்.

எங்களுடைய நாட்டின் நீதித்துறை உலகத்திலே இருக்கின்ற நாகரிகமான நாடுகளிலே காணப்படுகின்ற நீதித்துறை என்று நாங்கள் சொல்லக்கூடுமாகவிருந்தால் ஆகக்குறைந்தது இதுவாவது நடப்பிக்கப்பட வேண்டும். இது ஒரு பரீட்சார்த்தமான வழக்கு என்ற வகையில் அது நடைபெறவில்லை.

இலங்கை நீதித்துறையில் நியாயமான நீதி வழங்கப்படாது. ஆகவே இலங்கையில் இடம்பெற்ற போர்க் குற்றங்களை விசாரிப்பதற்கு சர்வதேச நீதிபதிகள், சர்வதேச விசாரணையாளர்கள் தேவையென நாம் வலியுறுத்தியமை நியாயமானதென நேற்று சனிக்கிழமை அதிகாலை வெளியாகிய முன்னாள் பா.உறுப்பினர் ரவிராஜின் படுகொலை வழக்கு தீர்ப்பு சர்வதேசத்திற்கு எடுத்துச் சொல்லியுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.