தந்தை செல்வா கூறியவாறு வடக்கின் பலம் கிழக்கு மக்களுக்கு கொடுக்க வேண்டும்

வடகிழக்கு இணைப்பிற்கு முஸ்லிம் மக்கள் உணர்வோடும் இணக்கத்தோடும் ஒன்று சேர்ந்து ஒத்துழைக்க வேண்டும் என்று பகிரங்கமாக அழைப்பு விடுப்பதாக தமிழரசுக் கட்சியின் தலைவரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா கூறினார்.

வடகிழக்கு இணைப்பு என்பது இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் மூலம் கொண்டு வரப்பட்டு 18 ஆண்டுகள் நடைமுறையில் இருந்தது.

முஸ்லிம்களும் தமிழர்களும் இணைந்த வடகிழக்கு தாயகத்தில் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்பதுதான் எமது குறிக்கோள்.

தந்தை செல்வா கூறியவாறு வடக்கின் பலம் கிழக்கு மக்களுக்கு கொடுக்க வேண்டும் என்பதையே நாங்களும் எதிர்பார்த்து நிற்கின்றோம்.

நாங்கள் அனைவரும் சேர்ந்து பேசுவோம். சென்ற முறை மாகாணசபைத் தேர்தலில் முஸ்லிம் மக்கள் எங்களுக்குத் தேவை என்பதற்காக முதலமைச்சு பதவியினையும் கொடுத்தோம்.

ஆனால் முஸ்லிம் காங்கிரஸ் எங்களுடன் ஒத்துழைக்கவில்லை என்பது ஒரு துரதிஷ்டவசமான உண்மை.
நாங்கள் வடகிழக்கு இணைப்பு பற்றி ஜனாதிபதியிடம் கூறினோம். அதற்காக முஸ்லிங்களுடன் பேசுங்கள் என்று கூட கூறினோம்.

அதற்காக நாங்கள் பொறுத்திருந்து பார்க்க வேண்டிய சூழலுக்குள் இருக்கின்றோம். வட்டுக்கோட்டை தீர்மானத்தினை நாங்கள் இப்பொழுது கோரவில்லை.

மாறாக பூரண அதிகாரத்தை கொண்டிருக்கும் சமஷ்டி முறையிலான தீர்வினையே கேட்டு நிற்கின்றோம்
சமஷ்டி தத்துவத்தின் அடிப்படையிலே அதிகாரங்கள் பகிரப்பட்டு இணைந்த வடகிழக்கில் ஆட்சி அதிகாரத்தினை நாங்களே பயன்படுத்துகின்ற அளவிற்கு தீர்வு கிடைக்க வேண்டும்.

தந்தை செல்வா கூறியவாறு நம்ப நட. நம்பி நடவாதே என்பதையே விடுதலைப் புலிகளும் ஜனநாயக ரீதியாக செயற்பட்ட தமிழரசுக் கட்சியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தமிழர் விடுதலைக் கூட்டணி அனைத்தும் புரிந்துணர்வுடன் ஒன்று சேர்ந்து செயற்பட்டதனால் நாங்கள் சர்வதேசத்தில் மிகப் பலம் மிக்க சக்தியாகச் செயற்பட்டோம் எனத் தெரிவித்தார்.