முஸ்லிம் மக்களின் மீள் குடியேற்றம் தொடர்பில் அறிக்கை!

சமீப காலமாக முஸ்லிம் மக்களுக்கு வடமாகாண சபை காணிகள் பகிர்ந்தளிக்கும் விடயத்தில் பாரபட்சம் காட்டுவதாகவும் துரோகம் இழைப்பதாகவும் குறிப்பிட்டு பாராளுமன்ற உறுப்பினர்களும் மாகாண சபை உறுப்பினர்களும் குற்றச்சாட்டுக்களை அடிக்கடி முன் வைக்கின்றார்கள் என வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

முஸ்லிம் மக்களின் மீள் குடியேற்றம் தொடர்பில் கருத்து வேறுபாடுகள் நிலவுகின்ற நிலையில் அது தொடர்பாக இன்று(27) அவர் வெளியிட்ட அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் அந்த அறிக்கையில்,

மீள் குடியேற்ற அமைச்சின் கீழ் வடக்கில் இருந்து இடம் பெயர்ந்த சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களை மீள் குடியேற்றுவதற்கும் புனர் வாழ்வளிப்பதற்கும் என துரித செயலணி ஒன்று தெரிவு செய்யப்பட்டுள்ளது.

வட மாகாணத்தின் காணி அமைச்சர் என்ற ரீதியில் மேற்படி குடியேற்றம் தொடர்பாக சரியான புள்ளி விபரங்களை எல்லா மக்களும் அறியும் வண்ணம் மாகாண சபையின் வரவு செலவுத் திட்ட விவாதத்தின் போது என்னால் அறிக்கை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டது.

இருந்த போதிலும் மேலும் ஒரு முறை ஊடகங்கள் வாயிலாக அறியத் தர விரும்புகின்றேன்.

2015 டிசம்பர் மாதம் வரை மீள் குடியேறுவதற்கு விண்ணப்பித்தவர்கள், மீள் குடியேற்றப்பட்டவர்கள், இன்னும் மீள் குடியேற்றப்பட வேண்டிய முஸ்லிம் குடும்பங்களின் விபரங்கள் பின்வருமாறு,

66

வட மாகாண காணி ஆணையாளரால் உறுதிப்படுத்தப்பட்ட புள்ளி விபரங்களின் படி காணி இல்லாத தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள குடும்பங்கள் பின்வரும் எண்ணிக்கையில் காணிகளைப் பெற்றுள்ளனர்.

2013 ஆம் ஆண்டு தொடக்கம் 2016 ஆம் ஆண்டு வரையுள்ள காலப் பகுதியில் மொத்தமாகக் காணிகளைப் பெற்றோர் எண்ணிக்கை 4307 அதன் புள்ளி விபரங்கள் பின்வருமாறு,

67

இதன்படி வழங்கப்பட்ட மொத்த காணிகளில் 73.02 வீதமான காணிகள் முஸ்லிம் மக்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. மேற்படி அட்டவணையில் காணப்படும் எண்ணிக்கையிலான காணி அனுமதிப் பத்திரங்கள் காணி அமைச்சராகிய முதலமைச்சர் அவர்களினால் உரிய அங்கீகாரத்துடனும் அனுமதியுடனும் தயாரிக்கப்பட்டு வழங்குவதற்கு உரிய பிரதேச செயலாளர்களிடம் தயாராக உள்ளன.

ஆயினும் குறிப்பிட்ட பயனாளிகளில் ஒரு பகுதியினர் தங்களுடைய காணிகளில் குடியேறாது வேறு இடங்களில் குறிப்பாக புத்தளத்தில் வசித்து வருவதனால் சில காணி அனுமதிப் பத்திரங்கள் கொடுக்கப்படவில்லை. அவர்கள் தங்கள் காணிகளில் குடியேறும் பட்சத்தில் அனுமதிப் பத்திரங்கள் கையளிக்கப்படும்.

எனவே முஸ்லிம் மக்களுக்கு மீள் குடியேறுவதிலும் காணி வழங்குவதிலும் பாரபட்சம் காட்டப்பட்டது என்கின்ற குற்றச்சாட்டு அடிப்படையற்றது எனத் தெரிவித்தார்.