கல் வீடுதான் வடக்கு மக்களின் விருப்பமாக உள்ளது – இரா.சம்பந்தன்

பாதிக்கப்பட்ட மக்களே பொருத்து வீடுகளை விரும்பாத நிலையில், பொருத்து வீடுகளைத்தான் வடக்கில் அமைக்க வேண்டும் என்றும், அவற்றை அமைத்தே தீருவேன் என்றும் மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதன் கூறிப் பிடிவாதமாக இருப்பது நல்லதல்ல. இதனை உடனடியாக மறுபரிசீலனைசெய்து வடக்கு மக்களின் விருப்பத்துக்கு ஏற்றதாக மனச்சாட்சியின்படியே அமைச்சர் நடந்துகொள்ள வேண்டும். கல் வீடுதான் வடக்கு மக்களின் விருப்பமாக உள்ளது என்பதை அமைச்சர் புரிந்துகொள்ள வேண்டும்.”

– இவ்வாறு தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
“எவர் எதிர்த்தாலும் வடக்கு மாகாணத்தில் பொருத்து வீடு அமைக்கப்பட்டே தீரும். அதில் மாற்றமில்லை” என்று மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதன் தொடர்ந்தும் தெரிவிப்பது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் மேலும் கூறியதாவது:-

“பொருத்து வீட்டுத் திட்டம் தொடர்பில் மக்களின் மனதையறிந்தும், தனது மனச்சாட்சிப்படியும் மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதன் நடந்துகொள்ளவேண்டும் என்று அவரிடம் முதற்கட்டமாகக் கேட்டுக்கொள்கின்றேன்.
மக்களின் விருப்பு இன்றி எதனையும் நடைமுறைப்படுத்தக்கூடாது. வடக்கு, கிழக்கு மக்கள் பல வழிகளிலும் துன்பப்பட்டவர்கள். அந்த மக்களின் தேவையை அவர்களே கூறவேண்டும்.

அவ்வாறு பாதிக்கப்பட்ட மக்களே பொருத்து வீடுகளை விரும்பாத நிலையில், பொருத்து வீடுகளைத்தான் வடக்கில் அமைக்க வேண்டும் என்றும், அவற்றை அமைத்தே தீருவேன் என்றும் மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதன் கூறிப் பிடிவாதமாக இருப்பது நல்லதல்ல.

இதனை உடனடியாக மறுபரிசீலனைசெய்து மக்களின் விருப்பத்துக்கு ஏற்றதாக மனச்சாட்சியின்படியே அமைச்சர் நடந்துகொள்ள வேண்டும்.

கல் வீடுதான் வடக்கு மக்களின் விருப்பமாக உள்ளது என்பதை அமைச்சர் புரிந்துகொள்ள வேண்டும். இதைவிடுத்து பிடிவாதமாகக் கருத்துக்களைத் தெரிவிப்பதை அமைச்சர் சுவாமிநாதன் நிறுத்த வேண்டும்” – என்றார்.