நாட்டு மக்களினால் தோற்கடிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆட்சியைக் கவிழ்ப்பது எப்படி? இதற்கு ஒருபோதும் மக்கள் ஆதரவு வழங்கமாட்டார்கள்.’
இவ்வாறு சிறிலங்காவின் எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
2017ஆம் ஆண்டில் தற்போதைய ஆட்சியைக் கவிழ்ப்பதே தனது இலக்கு என்று இலங்கையில் பணியாற்றும் வெளிநாட்டு ஊடகவியாலாளர்களிடம் சிறிலங்காவின் முன்னாள் ஜனாதிபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான மகிந்த ராஜபக்ச கடந்த வியாழக்கிழமை தெரிவித்திருந்தார்.
சிறிலங்காவின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் கருத்து அநாவசியமானது. 2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போதும், அதே ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின் போதும் மக்கள் தமது ஆணையை ஜனநாயக ரீதியில் வெளிப்படுத்தினர்.
சிறிலங்காவின் ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேனவை நாட்டு மக்கள் தெரிவு செய்தனர். அதேவேளை, சிறிலங்காவின் பிரதமராக ரணில் விக்கிரமசிங்கவைத் தேர்ந்தெடுத்தனர்.
இந்த இரண்டு தேர்தல்களிலும் மகிந்த ராஜபக்ச தோற்கடிக்கப்பட்டார். இதன்போது மீண்டும் ஜனாதிபதியாகவும் பிரதமராகவும் வருவதற்கு முயன்ற மகிந்த ராஜபக்ச நாட்டு மக்களினால் தோற்கடிக்கப்பட்டார்.
மகிந்த ராஜபக்சவின் தற்போதைய கருத்து, ஜனநாயகத்தை உதாசீனப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. நல்லாட்சியை எவரும் குழப்பக்கூடாது. மக்களின் ஜனநாயகத் தீர்ப்புக்கு ஏற்றவாறு நடக்க வேண்டும்.