அகிம்சை ரீதியாக போராடுவதும் ஆயுதம் தூக்கி போராடுவதும் உலக இனங்களின் வரலாற்றில் நிகழ்ந்த கள யதார்த்தம் – ஈ.சரவணபவன்

ஒரு இனத்தவரின் வாழ்வாதாரத்திற்காக இன்னொரு இனத்தின் மீதான அடக்கு முறை நிகழ்கின்ற போது, அகிம்சை ரீதியாக போராடுவதும் ஆயுதம் தூக்கி போராடுவதும் உலக இனங்களின் வரலாற்றில் நிகழ்ந்த கள யதார்த்தம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்துள்ளார்.

புதுவருட பிறப்பிற்கான வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

குறித்த வாழ்த்துச் செய்தியில்,

வடக்கு கிழக்கில் போர் அகன்று ஏழு வருடங்களின் பின்னர் தமிழ் மக்கள் இந்த புதுவருடத்தை கொண்டாடுகின்றனர்.

எம் இனம் தமிழ் இனமாக பிறந்தமையால் வாயால் சொல்ல முடியாத துயரங்களை அனுபவித்து வருகிறது.

ஒவ்வொரு வருடமும் பிறக்கும் போதும், இந்த வருடமாவது விமோசனம் கிடைக்குமா என்ற பெரும் அவாவுடன் எம் மக்கள் நித்திரையிலிருந்து விழிக்கின்றனர்.

ஆறு தசாப்த காலமாக இத்துயரம் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது.

2017 ஆம் ஆண்டு பலத்த எதிர்பார்ப்புடன் பிறந்திருக்கின்றது.

மக்கள் தலையெழுத்தை தீர்மானிக்கும் புதிய அரசியல் சாசனம் வரையப்படுகிறது.

அது எமது மக்களுக்கு அரசியல் தீர்வை வழங்க வேண்டும். எம் மக்களின் வாழ்வு உயர்வடைய வேண்டும் என்று இந்த நாளில் பிராத்திக்கிறேன் என தெரிவித்தார்.

மேலும், உலகெங்கும் உள்ள தமிழ் மக்களுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் என சரவனபவன் இதன் போது குறிப்பிட்டார்.