மாற்றுத்திறனாளிகளின் மனங்கள் நோகாது எங்களது சமூகம் நடந்துகொள்ள வேண்டும் – சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா

மாற்றுத்திறனாளிகளின் மனங்கள் நோகாது எங்களது சமூகம் நடந்துகொள்ள வேண்டும் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா தெரிவித்துள்ளார்

கிளிநொச்சியில் இன்று(02) பிற்பகல் கூட்டுறவாளர் மண்டபத்தில் பேராதனை பல்கலைக்கழக விஞ்ஞான பீட மாணவன் செந்தூரனின் யாதுமாகி கவிதை நூல் அறிமுகவிழா இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், இந்த நிகழ்வில் நான் ஒரு பாராளுமன்ற உறுப்பினராகவோ அல்லது அந்த உணர்வோடும் வரவில்லை. நான் ஒரு மாற்றுத்திறனாளியாகவே வந்திருக்கின்றேன்.

எனக்கு செந்தூரனை தெரியாது. ஆனால் இந்த யாதுமாகி கவிதை நூல் அறிமுக விழாவில் கிடைக்கும் நிதியை கிளிநொச்சி மாற்றுத்திறனாளிகள் சங்கத்திற்கு வழங்குவதற்கு எடுத்த தீர்மானத்தின் காரணமாக அந்த மாற்றுத்திறனாளிகளுக்காகவே வந்திருக்கின்றேன்.

நான் இங்கு ஒன்றை கூற விரும்புகின்றேன். அண்மையில் பங்களாதேஷுக்கு சென்றிருந்த போது அங்கு அந்த நாட்டின் விடுதலைக்காக தம்மை குடும்பத்தோடு அர்ப்பணித்த முஜிபூர் ரகுமான் அவா்களது குடும்பத்தில் ஒரு இரவில் ஐந்து பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.

பங்களாதேஷில் நாட்டுக்காக தங்களை அர்ப்பணித்த அவா்களின் நினைவுகளை பேணுவதற்காக சுட்டுக்கொலை செய்யபட்ட அந்த இடத்தை மாளிக்கையாக மாற்றி, அவர்கள் அணிந்திருந்த ஆடைகள், காலணிகள், பயன்படுத்திய சமையல் பாத்திரங்கள், மற்றும் சுடப்பட்ட தோட்டாக்கள் என எல்லாவற்றையும் கண்ணாடி பெட்டிக்குள் கௌரவமாக. உணர்வோடு பேணி பாதுகாத்து வைத்திருகின்றார்கள்.

தமிழர்கள் எல்லா சின்னங்களை தொலைத்து விட்டு இருக்கின்றார்கள். அந்த வகையில் செந்தூரன் போன்று தனது தந்தையை இந்த மண்ணுக்காக அர்ப்பணித்த ஒருவரின் உணர்வோடு வெளிவருகின்ற இந்த கவிதைகள் தான் எஞ்சியிருக்கின்றன.

ஆனால், இவ்வாறான நிகழ்வுகளுக்கு எம்மவர்கள் கொடுக்கின்ற மதிப்பை பார்க்கின்ற போது மிகவும் மனவேதனையாக இருக்கிறது.

மாற்றுத்திறனாளிகள் தங்களாக விரும்பி இவ்வாறு தங்களை மாற்றிக்கொண்டவர்கள் அல்ல. இந்த நாட்டுக்காக, மக்களின் விடிவுக்காக தங்களை அர்ப்பணித்து இன்று தங்கள் உடல்களில் கால், கை, கண், இடுப்பு ஆகியவற்றை இழந்த பல்வேறு கொச்சை சொற்களுடன் விழிக்கப்பட்டு வாழ்ந்து வருகின்றார்கள் இது மிகவும் மனவருத்தமானது.

இந்த நிலைமாறவேண்டும். சமூகத்தின் மனங்கள் மாறவேண்டும். எங்களுடைய மாற்றுத்திறனாளிகளை பகடைகாய்களாக மாற்றி பலபேர் வாழ்ந்துக்கொண்டிருக்கின்றார்கள்.

மேலும் இப்படி பல சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றது என பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா என குறிப்பிட்டுள்ளார்.