ஊடகங்கள் பொறுப்பற்ற கருத்துகளுக்கு முன்னுரிமை வழங்குவதை தவிர்க்க வேண்டும்.

தமிழர்களின் வரலாறுகளை எமது மண்ணில் பதிவில் இட நான் முயன்று கொண்டிருக்கும் இந்த காலத்தில் ஊடகங்கள் பொறுப்பற்ற கருத்துகளுக்கு முன்னுரிமை வழங்குவதை தவிர்க்க வேண்டும். ஊடகங்கள் பொறுப்புடன் தமிழினத்தின் கௌரவம் காக்க செயல்பட வேண்டும். மேலும் பண்டாரவன்னியனின் சிலையை பல நூறு படித்த புத்திஜீவிகளுடன் சேர்ந்து ஊரே திரண்டு திறந்து வைத்தது. அந்த நிகழ்வில் உலக தமிழர்கள் பண்பாட்டு பேரவையின் சர்வதேச தலைவர் V.S..துரைராசா உட்பட பல பத்து புத்திஜீவிகள் ஆரோக்கியமான கருத்துக்களை தெரிவித்திருந்தனர். சிறந்த கருத்துக்களை மக்களிடம் போவதை தவிர்த்த ஊடகங்கள் சில மது போதையில் வந்து கூக்குரலிட்டவர்களினதும் ஒரு சில புல்லுருவிகளினதும் கருத்துக்களுக்கு முன்னுரிமை அளித்தது கவலைக்குரிய விடயம். ஊடகங்கள் சில சூடான செய்திகள் வேண்டும் என்பதற்காக இப்படியாக செயல்படுவார்களெனின் சமுதாயத்தில் தமது முகத்தை வெளிக் கொண்டு வர போதைக்காரர்களும் புல்லுருவிகளும் சமுதாயத்தில் பல்கி பெருகுவர்.
எதிர்காலத்தில் எந்தவொரு நல்ல காரியத்தையும் செய்து முடிக்கமுடியாத நிலைமை தோன்றும். பொய் முகங்கள் விளம்பரம் வேண்டி பொய்யான கருத்துக்களை சூடாக வெளிப்படுத்தும் போது அதன் பின்னால் ஊடகங்கள் செல்லாமல் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்பதை ஆதங்கத்துடன் வெளிப்படுத்தி நிற்கிறேன்.
வைத்தியகலாநிதி சி.சிவமோகன்
பாராளுமன்ற உறுப்பினர்,
வன்னி மாவட்டம்.
இணைத்தலைவர்
முல்லை மாவட்ட அபிவிருத்தி இணைப்புக்குழு.