ஒற்றையாட்சியை ஏற்கவேமாட்டோம் – சம்பந்தன் திட்டவட்டம்

“தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிறைவு செய்யாத எந்தவொரு தீர்வையும் தொட்டுப் பார்க்க முடியாது. அதேவேளை, ஒற்றையாட்சியையும் ஏற்கமுடியாது.”
– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று வெள்ளிக்கிழமை மாலை 5 மணி முதல் இரவு 8 மணிவரையில் கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்போதே மேற்படிக் கருத்தைக் கூட்டமைப்பின் தலைவர் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் முன்பாகத் தெரிவித்தார்.

மேற்படி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் சகல கட்சிகளின் சார்பில், “வடக்கு கிழக்கு இணைந்த ஒரு சமஷ்டி ஆட்சியே வேண்டும். தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிறைவு செய்யாத எந்தத் தீர்வையும் ஏற்றுக்கொள்ளமுடியாது. இது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அடிக்கடி கூடி ஆராயவேண்டும்” என்ற கருத்து ஒருமித்து முன்வைக்கப்பட்டது.

இதேவேளை, “அரசுடனான பேச்சுக்களில் கூட்டமைப்பின் தலைவர் மற்றும் பேச்சாளர் சுமந்திரன் ஆகியோர் மட்டுமே பங்கேற்பதனால் எமக்கு அது தொடர்பில் தெரிவதில்லை. நாம் மக்களிடம் செல்லும்போது அவர்கள் எம்மிடம் கேட்கும் கேள்விகளுக்கு நாம் பதிலளிக்க வேண்டும். அத்துடன் தற்போதுள்ள உப குழுக்களின் ஊடாக மட்டுமன்றி கட்சி ரீதியிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அங்கம் வகிக்கும் நான்கு கட்சிகளின் பிரதிநிதிகளையும் உள்ளடக்கி அரசுடன் பேச்சில் ஈடுபடவேண்டும்” என்று ஈ.பி.ஆர்.எல்.எவ். தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கோரிக்கை விடுத்தார்.

அதேவேளை, “கட்சி ரீதியான பேச்சுக்கள் இடம்பெறவேண்டும். அதேசமயம் தற்போது இடம்பெறுகின்ற முன்னெடுப்புக்களில் இருந்து எந்த நிலையிலும் விலகிக்கொள்ளக்கூடாது” என்று புளொட் தலைவர் த.சித்தார்த்தன் தெரிவித்தார்.

ரெலோவின் சார்பில் ஸ்ரீக்காந்தா கருத்துரைக்கையில், “தீர்வு தொடர்பில் தொடர்ந்தும் பேச்சுக்களை முன்னெடுத்து அபிலாஷைகளை வென்றெடுப்பதோடு இப்போது இடம்பெறும் நடவடிக்கைகளையும் உடைக்கக்கூடாது” என்றார்.
இவற்றுக்குப் பதிலளித்து உரையாற்றிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்,
“தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிறைவு செய்யாத எந்தவொரு தீர்வையும் தொட்டுப் பார்க்க முடியாது. அதேநேரம் ஒற்றையாட்சியையும் ஏற்கமுடியாது.

வடக்கு, கிழக்கு மீள் இணைப்பில் முஸ்லிம்களின் நிலைப்பாடும் ஒரு முக்கிய இடத்தில் உள்ளது. ஆனால், முஸ்லிம்களோ வடக்கு – கிழக்கு மீள் இணைப்பில் அக்கறை காட்டவில்லை என்பதுடன் இதற்கான பேச்சுக்களிலும் ஆர்வம் இன்றியே உள்ளனர்.

இருப்பினும், இதற்குப் பல வழிவகைகள் உண்டு. மாற்றுத் திட்டங்களும் உண்டு. அவை தொடர்பிலும் ஆராயலாம். கூட்டமைப்பு சார்பில் அரசுடன் நாம் எல்லோரும் பேசலாம்” – என்றார்.