சர்வதேச நீதிபதிகள் பங்களிப்பு கட்டாயம் – இல்லையேல் விசாரணைப் பொறிமுறை சாத்தியமற்றது

“சர்வதேச நீதிபதிகள் பங்கேற்காத போர்க்குற்ற விசாரணைப் பொறிமுறை சாத்தியமில்லை. தமிழ் மக்கள் மட்டுமல்ல தென்பகுதி சிங்கள மக்களும் உள்ளக நீதிப் பொறிமுறையில் நம்பிக்கை கொள்ளவில்லை. சர்வதேச நீதிபதிகள் உள்ளடக்கிய கலப்புப் பொறிமுறையை அவர்களும் கோரியிருக்கின்றார்கள். நல்லிணக்க கலந்தாலோசனைச் செயலணியின் மக்கள் கருத்தறியும் அறிக்கை இதனையே வெளிக்காட்டியிருக்கின்றது. அந்த அறிக்கையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முழுமையாக வரவேற்கின்றது.”
– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
நல்லிணக்க கலந்தாலோசனைச் செயலணியின் மக்கள் கருத்தறியும் குழுவின் அறிக்கை கடந்த 3 ஆம் திகதி இரவு அரசிடம் கையளிக்கப்பட்டது. அறிக்கை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாட்டைக் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல தெற்கு மக்களுக்கும் உள்நாட்டு நீதிபதிகள் மீது நம்பிக்கையில்லை. சர்வதேச பங்களிப்பையே அவர்களும் விரும்புகின்றனர். விசாரணைப் பொறிமுறையில் தமிழ்மொழி தெரிந்த நீதிபதிகளும் உள்ளடக்கப்பட வேண்டும் என்று தமிழ் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஜெனிவாவில் 2015 ஆம் ஆண்டு இலங்கையின் இணை அனுசரணையில் கலப்பு விசாரணைப் பொறிமுறையை வலியுறுத்திய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அந்த அறிக்கை வருவதற்கு முன்னரே கலப்புப் பொறிமுறையை வலியுறுத்தியிருந்தது. இதனை அறியாதவர்கள் பலர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக விமர்சனங்கள் – எதிர்ப்புக்களை முன்வைத்தனர்.
ஐ.நா. மனித உரிமைகள் சபையின் அறிக்கையில் கலப்பு நீதிமன்றப் பொறிமுறை தொடர்பாக தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
சர்வதேச நீதிபதிகள் உள்ளடக்கப்படாத விசாரணை சாத்தியமற்றது. கலப்புப் பொறிமுறையை பரிந்துரைத்த ஐ.நா. மனித உரிமைகள் சபை உள்ளகப் பொறிமுறையை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது. கலப்புப் பொறிமுறையை ஐ.நா. மனித உரிமைகள் சபை ஏற்கும்.
ஐ.நா. மனித உரிமைகள் சபையின் தீர்மானம், மக்கள் கருத்து, அதனை அடியொற்றி அமைந்த நல்லிணக்கச் செயலணியின் அறிக்கையை முழுமையாக வரவேற்கின்றோம். ஐ.நா. மனித உரிமைகள் சபையின் தீர்மானத்தில் சொல்லப்பட்டதைப் போன்று, நல்லிணக்கச் செயலணியின் பரிந்துரையில் குறிப்பிட்டவாறு கலப்பு நீதிமன்றப் பொறிமுறை அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற வேண்டும். அதற்கு நாம் தொடர்ந்து அழுத்தம் கொடுப்போம்” – என்றார்.