நல்லாட்சியின் இரண்டாண்டு வருடக் கொண்டாட்டத்தை ஜீரணிக்க முடியாதுள்ளது

பெரும்பான்மை இன மக்களின் ஒரு பகுதியினராலும் சிறுபான்மையின மக்களின் பெரும் பகுதியினராலும் கொண்டு வரப்பட்ட இந்த அரசாங்கத்தின் ஆட்சி இரண்டு வருடங்களைக் கழித்திருக்கின்றது. இந்த அரசாங்கம் எமது மக்களின் பிரச்சினைகளுக்கு அரசியலமைப்பினூடாக தீர்வு காணப்படும் எனக் கூறிக் கொண்டு பல வருடங்களாக மக்களை ஏமாற்றி வருகின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மார்க்கண்டு நடராசா தெரிவித்தார்.

நல்லாட்சி அரசாங்கத்தின் செயற்பாடு இரண்டு வருடங்களைக் கடந்துள்ள நிலையில் அது தொடர்பில் இன்று(09) கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில், கடந்த கால அரசாங்கங்கள் எமது மக்களை நசுக்கி எவ்வாறு காலம் கடத்தியதோ அது போல் இந்த அரசாங்கமும் எம்மைக் காலம் கடத்தி வருகின்றது. ஆகவே இந்த அரசு ஒரு நல்லாட்சி அரசாக இருக்குமாக இருந்தால் எமது மக்கள் ஏற்றுக் கொள்ளக் கூடிய நியாயமான ஒரு தீர்வைப் பெற்றுத் தர வேண்டும்.

இரண்டு வருட பூர்த்தியை நல்லாட்சி அரசு கொண்டாடினாலும் தமிழ் மக்களுக்கு பாரிய அளவில் அதில் உடன்பாடு இல்லை. தற்போதும் மக்களின் அடிப்படை வசதிகள் பூர்த்தி செய்யப்படவில்லை. நல்லட்சி என்று சொல்லும் அளவிற்கு இரண்டு வருடங்களில் பாரியளவில் முன்னேற்றம் காணப்படவில்லை. சிறையிலிருப்பவர்கள் விடுவிக்கப்படவில்லை. மீள்குடியேற்றம் பூர்த்தி செய்யப்படவில்லை. படையினரால் ஆக்கிரமிக்கப்பட்ட காணிகள் விடுவிக்கப்படவில்லை, இவ்வாறான நிலையில் இருந்து கொண்டு தற்போது நல்லாட்சியின் இரண்டாண்டு வருடக் கொண்டாட்டத்தை நடாத்துவதை எம்மால் ஜீரணிக்க முடியாதுள்ளது.

எனவே அரசாங்கம் எமது தலைவர்கள் வேண்டி நிற்கும் எமது மக்களுக்கான தீர்வைப் பெற்றுக் கொள்ள நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான் இலங்கையில் நல்லாட்சியை ஏற்படுத்திய சிறந்த தலைவர் என்ற பெருமையை தற்போதைய ஜனாதிபதி பெறுவார்.

அவ்வாறு மேற்கொள்ளும் பட்சத்தில்தான் உண்மையான நல்லாட்சி உருவாகும். இல்லையேல் வீதிக்கு இறங்கி அரசுக்கு எதிராகப் போராட வேண்டிய நிலையும் அகிம்சை ரீதியாகப் போராடும் நிலையும் ஏற்படும். இதனை யாரும் தடுக்கவும் முடியாது எனத் தெரிவித்தார்.

இதன் போது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தற்போதைய மட்டக்களப்பு மாவட்ட கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான ஞானமுத்து கிருஸ்ணபிள்ளை தெரிவிக்கையில், இந்த நாட்டிலே வடக்கு கிழக்கு மக்கள் போராடி பல இழப்புக்களைச் சந்தித்திருந்த வேளையில் இந்திய நாட்டின் பெரும் தலைவர் வடக்கையும் கிழக்கையும் இணைத்து ஒரு மாநிலமாக வழங்கப்பட்டிருந்தமை அனைவரும் அறிந்த விடையமாகும்.

ஆனால் இந்நாட்டிலுள்ள பிரிவினைவாதிகள் வடக்கு வேறாகவும் கிழக்கு வேறாகவும் பிரித்துள்ளார்கள். எனவே தற்போதைய இந்திய பிரதமர் நரேந்திர மோடி தலையீடு செய்து வடக்கையும் கிழக்கையும் மீண்டும் இணைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுவே தமிழர்களின் எதிர்பார்ப்பாகும்.

நல்லாட்சி அரசாங்கத்தின் பதவிக்காலம் 2 வருடங்கள் கழிந்த நிலையில் இவ்வரசாங்கம் தமிழ் மக்களுக்கு பெரிதாக ஒன்றும் செய்ய வில்லை. இந்த நல்லாட்சியைக் கொண்டு வந்ததில் பெரும் பங்கு வகித்தவர்கள் தமிழ் மக்கள். இவற்றினை விட நாடாளுமன்றத்திலே எதிர்க் கட்சித் தலைவராக இருந்தாலும் நல்லாட்சி அரசுக்கு உறுதுணையாக இருந்து உரக்கக் குரல் கொடுத்து வருகின்றவர் எமது பெரும் தலைவர் இரா.சம்மந்தன்.

இந்நிலையிலும் கூட அத்துமீறிய குடியேற்றங்கள் தடுக்கப்படவில்லை. புனர்வாழ்வழிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரங்களைப் பெருக்குவதற்கு உரிய நடவடிக்கைள் மேற்கொள்ளப்படவில்லை. ஒரு சில காணிப்பரப்புக்கள் விடுவிக்கப்பட்டாலும் மறுபுறத்தில் காணி ஆக்கிரமிப்புக்கள் நடைபெற்றுக் கொண்டு வருகின்றன. தனியார் வீடுகளில் தங்கியிருக்கும் இராணுவ முகாம்கள் அகற்றப்பபடவில்லை.

எனவே நல்லாட்சி அரசின் 3 ஆவது வருடம் ஆரம்பிக்கும் இவ்வேளையில் எமது எமது மக்களின் அபிலாசைகளை 2017 இல் ஆவது நிறைவேற்றப்படும் என்ற நோக்குடன் எமது தலைவர்கள் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். 2017 இல் வடக்கு கிழக்கு இணைக்கப்பட்டு புரையோடிப் போயிருக்கும் எமது மக்களின் பிரச்சினைக்கு நல்லாட்சி என்று சொல்லப்படுகின்ற அரசாங்கம் தீர்வு பெற்றுத் தர வேண்டும் எனத் தெரிவித்தார்.