tna-atul-keshab-300x128

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவருக்கும் இடையில் முக்கிய கலந்துரையாடல்

புதிய அரசியல் யாப்பு மற்றும் நல்லிணக்கம் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவருக்கும் இடையில் முக்கிய கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.

கொழும்பில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற இச் சந்திப்பின்போது, புதிய அரசியல் யாப்பு, புதிய வருடத்தில் முன்னெடுக்கப்படவுள்ள செயற்பாடுகள் மற்றும் நல்லிணக்கம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்த தமது நிலைப்பாட்டை அமெரிக்க தூதுவர் அதுல் கேஷாப்பிடம் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, இலங்கை குறித்து அமெரிக்கா கொண்டுள்ள கரிசனைகள் தொடர்பாக அமெரிக்க தூதுவர் கலந்துரையாடியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இச் சந்திப்பில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரனும் இலங்கைக்கான அமெரிக்காவின் பிரதித் தூதுவர் பொப் ஹில்டனும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சிறிலங்காவின் அனைத்தும் மக்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையிலான நல்லிணக்கம் மற்றும் அமைதி தொடர்பான தனது பார்வையை, இரா.சம்பந்தன் பகிர்ந்து கொண்டார் என்று, அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப் குறிப்பிட்டுள்ளார்.

சிறிலங்காவில் நல்லிணக்க மற்றும் அரசியலமைப்பு மாற்றம் தொடர்பான செயற்பாடுகள் முடக்க நிலையை நோக்கி நகரத் தொடங்கியுள்ள நிலையில், இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

சில நாட்களுக்கு முன்னர், சிறிலங்காவின் அமைச்சர் மனோ கணேசனையும் அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப் சந்தித்து நல்லிணக்க முயற்சிகள் மற்றும் தற்போதைய அரசியல் நிலவரங்கள் குறித்து கலந்துரையாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.