sss

இவர்களின் நம்பிக்கை கிடைக்கும் வரை அதிகார பகிர்வு சாத்தியமில்லை..!

முஸ்லிம் மக்களின் நம்பிக்கையை பெறும்வரை அதிகார பகிர்வு வடக்கு – கிழக்கு இணைப்பு சாத்தியமில்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடக பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பிருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

உத்தேச அரசியல் யாப்பு தொடர்பில் கருத்துத் தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இது குறித்து தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

உத்தேச அரசியல் யாப்பில் 13 ஆவது திருத்தச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டவாறு அதிகாரங்கள் பகிரப்படுகின்ற அதேவேளை, அதில் காணப்படுகின்ற பொதுப்பட்டியல் நீக்கப்படுவதுடன் வடக்கு, கிழக்கு இணைப்பும், முஸ்லிம் மக்களின் நம்பிக்கையை பெறும் வரை சாத்தியமாகாது.

தற்போது சமஷ்டியா அல்லது ஒற்றையாட்சியா என்பது நாடளாவிய ரீதியில் பல்வேறு வாதப் பிரதிவாதங்களை அதிகளவில் உள்ளது.

புதிய அரசியலமைப்பானது குறித்த வார்த்தைப் பிரயோகங்களை நீக்கிவிட்டு, பகிரப்படுகின்ற அதிகாரங்களை மீளப் பறித்தெடுக்கமுடியாத வகையிலான சட்ட ஏற்பாடுகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

நாட்டில் உள்ள எந்தவொரு சமூகத்தையும் பாதிக்காத முழுமையான அதிகாரப் பகிர்வாக அமையும் வகையிலேயே உருவாக்கப்படுகின்றதென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.