தமிழ் அரசியல் கைதிகள் குறித்து நீதியமைச்சருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குமிடையில் பேச்சு!

கொழும்பு 8ஆம் இலக்க நீதிமன்றத்தில் நடைபெறும் தமிழ் அரசியல் கைதிகள் 38பேரின் வழக்குகளை ஹோமாகம நீதிமன்றத்திற்கு மாற்றுவதை தடுப்பது குறித்து இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவுக்குமிடையில் சந்திப்பொன்று நடைபெறவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

கொழும்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் தமிழ் அரசியல் கைதிகளின் வழக்கு விசாரணைகளை சிங்களப் பிரதேசமான ஹோமாகமவுக்கு மாற்றும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.

தமிழ் அரசியல் கைதிகளின் வழக்கு விசாரணைகளைத் தாமதமாக்குவதற்காகவே அரசாங்கத்தினால் இவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் குற்றம் சாட்டியிருந்தார்.

இந்நிலையிலேயே, தமிழ் அரசியல் கைதிகளின் வழக்கு விசாரணைகளை ஹோமாகமவுக்கு மாற்றுவதைத் தடுப்பதற்காக இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவும் சந்தித்துப் பேச்சு நடாத்தவுள்ளனர்.