அரசாங்கத்தை எச்சரிக்கும் கூட்டமைப்பு..!

பிரச்சினைக்குத் தீர்வு காணும் யோசனையை இலங்கை அரசானது கைவிட்டால் அரசியலமைப்பு உருவாக்கம் மற்றும் வேறு செயற்பாடுகளுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு பங்களிப்பினை வழங்கமால் அதிலிருந்து வெளியேறும் நிலை ஏற்படும் என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் எச்சரித்துள்ளார்.

கொழும்பில் உள்ள ஆங்கில நாளிதழ் ஒன்றிக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நாட்டில் தற்போது உள்ள தேசிய பிரச்சினைக்கு வடக்கு கிழக்கு இணைந்த சமஷ்டி ஆட்சியினை அமைப்பது தொடர்பில் மக்களின் உத்தரவினை நாங்கள் பெற்றுள்ளோம்.

இதன் காரணமாக சிறந்த ஒரு முடிவினை பெற்றுக்கொள்வதற்காக இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை நடாத்தி வருகின்றோம்.

அதுமட்டுமன்றி விரிவான அதிகாரப்பகிர்விற்க்கான பொறிமுறை என்று அரசாங்கம் தெரிவிக்கும் 13 ஆவது திருத்த சட்டத்தினை தாங்கள் ஒருபோதும் ஏற்கமாட்டோம்.

தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் யோசனையை இலங்கை அரசாங்கம் கைவிடுமேயானால், அரசியலமைப்பை உருவாக்கும் செயற்பாடுகளில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பங்கேற்காது, அதிலிருந்து வெளியேறும் நிலை ஏற்படும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.