ஈழத்தமிழர் இனச்சிக்கலுக்கு என்ன தீர்வு கிடைக்கப் போகின்றது?- குருகுலராசா

இன்று தமிழர் கொண்டாடும் விழாக்களில் காலத்தால் பழமையானது பொங்கல் விழாவாகும். ஏறத்தாழ 2500 ஆண்டுகளாகத் தமிழர் பொங்கல் விழாவைக் கொண்டாடி வருவதற்குச் சங்க இலக்கியங்கள் சான்று பார்க்கின்றன என்பதை நீங்கள் அறிவீர்கள் என வடமாகாணக் கல்வி அமைச்சர் தம்பிராசா குருகுலராசா தெரிவித்துள்ளார்.

கனடாவில் நடைபெற்ற பொங்கல் விழாவில் உரையாற்றுகையில் இவ்வாறு கூறியுள்ளார்.

தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,

தமிழர் கொண்டாடும் வேறெந்த விழாவுக்கும் இத்தகைய தொன்மையும், சிறப்பும் இல்லை என்பதை நான் உங்களுக்கு கூறவேண்டியதில்லை.

செய் நன்றி மறவாமை என்னும் தமிழரது பண்பாட்டுக்கு எடுத்துக் காட்டாக விளக்கும் இந்த விழாவைச் சொந்த நாட்டோடு விட்டுவிடாமல் இந்த நாட்டுக்கும் கொண்டு வந்து போற்றிப் பேணுவது பெருமை தரும் செயலாகும்.

அந்த வகையிலே உலகிலே வாழும் ஒன்பது கோடி தமிழரோடு இணைந்து நாமும் பொங்கல் விழாவைக் கொண்டாடி மகிழ்வோம்.

உங்களது அயராத கூட்டு முயற்சியால் கனடிய நாடாளுமன்றத்தில் ஜனவரி மாதம் தமிழ் மரபுத்திங்கள் என ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள சூழலில் இம்முறை பொங்கல் விழாவை கொண்டாடுவது மட்டற்ற மகிழ்ச்சியை அளிக்கின்றது.

மாநகரம், மாநிலம், மத்திய என மூன்றுமட்ட அரசுகளும் ஜனவரி மாதத்தைத் தமிழ் மரபுத் திங்கள் என ஏற்றுக் கொள்ளச் செய்த உங்கள் அனைவருக்கும் தாயக மக்கள் சார்பில் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெவித்துக் கொள்ளுகின்றேன்.

ஜனவரி மாதம் தமிழ் மரபுத்திங்கள் என ஏற்றுக் கொள்ளப்பட்டுதன் மூலம் கனடாவில் வாழும் பல்லின மக்களும் தமிழ் மொழியின் அருமை, பெருமைகளையும் தமிழரது கலைகள் மற்றும் பண்பாட்டு விழுமியங்களையும் அறியும் வாய்ப்புக் கிடைத்துள்ளமை அறிந்து புளகாங்கிதம் அடைகின்றேன்.

எமது தாயகம் முப்பது ஆடு காலப் போரிலே பாரிய உயிர் இழப்பையும் பொருள் இழப்பையும் சந்தித்ததைத் தாங்கள் அறிவீர்கள். இந்த இழப்புகளுக்கு உள்ளாகிச் சொல்லொணாத துன்பத்தை எமது மக்கள் அனுபவித்து வருகின்றார்கள் என்பதையும் நான் உங்களுக்கு நான் கூறவேண்டியதில்லை.

எமது மக்களை இன்ப,துன்பங்களில் இருந்து மீட்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி கடந்த இரண்டு ஆண்டுகளாக நிபுணர்களைக் கொண்டு ஆய்வு செய்து வட மாகாண சபை அறிக்கை இட்டுள்ளது

இவ்வாறு ஆய்வு செய்யப்பட்ட கல்வி, சுகாதாரம் பற்றிய அறிக்கைகளின் அடிப்படையில் பன்னாட்டு நிபுணர்கள் பங்கு கொள்ளும் மாநாடு ஒன்று அடுத்து வரும் 15 ஆம், 16 ஆம், 17 ஆம் திகதிகளில் சென்டானியல் கல்லூரியிலில் நடைபெறவுள்ளதை நீங்கள் அறிவீர்கள்.

இந்த மாநாட்டிலே பங்குகொள்ள வடக்குக் கிழக்கு மாகாண கல்வி மற்றும் சுகாதாரத் துறையைச் சேர்ந்த உயர் அதிகாரிகளும் வடக்குக் கிழக்கு மக்களால் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதி நிதிகளாகிய நாமும் யாழ்ப்பாணம் மற்றும் கிழக்குப் பல்கலைக்கழகங்களை சேர்ந்தோருமாக 25 பேர்வந்துளோம்.

அமெரிக்கா, அவுத்திரேலியா, பிரித்தானியா உள்ளிட்ட உலகின் பல நாடுகளில் இருந்தும் 50 இற்கும் மேற்பட்ட துறைசார் நிபுணர்களும் வந்துள்ளனர்.

இந்த மாநாட்டின் விளைவாக தாயக மக்களுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும் எனவும் அவர்களது துன்பங்கள் நீங்கவும் வழிபிறக்குமென நம்புகிறோம்.

இந்தமாநாடு வெற்றி பெற மாநாட்டு அமைப்பாளர்களுக்கு உங்கள் ஆதரவை வழங்க வேண்டு என தாயக மக்கள் சார்பாக வேண்டிக்கொள்ளுகின்றேன்.

இலங்கையிலே புதிய அரசியல் அமைப்பு உருவாக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

ஈழத்தமிழர் இனச்சிக்கலுக்கு என்ன தீர்வு கிடைக்கப் போகின்றது? அதிகாரங்கள் பகிரப்படுமா? வடக்குக் கிழக்கு இணைக்கப்படுமா? போன்ற விடயங்களை அறிய நீங்கள் ஆர்வமாக இருப்பீர்கள் என்பதை நான் அறிவேன்.

அரசியல் அமைப்பு வழி காட்டல் குழுவிலே சம்பந்தன் ஐயாவும், நாடாளுமன்ற உறுப்பினர் சட்டவல்லுநர் சுமந்திரனும் உறுப்பினர்களாகவிருந்து கடுமையாக உழைத்து வருகின்றனர்.

அத்துடன்,எமது உரிமைகளை வென்றெடுக்கவேண்டும் என்ற நோக்கோடு பல்வேறு பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். அவற்றையெல்லாம் இப்பொழுது விரித்துரைப்பது பொருத்தமானதல்ல.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஐயா அரசியலுக்குப் புதிதாகக் கொண்டுவரப்பட்டவரல்ல. தந்தை செல்வநாயகம் காலம் தொடக்கம் இன்று வரை அரசியலில்இருப்பவர்.

அவர் இலங்கைக் குடியரசுத் தலைவராகப் பணிபுரிந்த ஜே ஆர் ஜெயவர்த்தனா, விஜயதுங்கா, பிரேமதாசா, சந்திரிகா பண்டார நாயக்கா , மகிந்தராசபக்ச முதலியோரோடும் இந்தியப்பிரதமராகப் பணிபுரிந்த இந்திராகாந்தி , இராசீவ் காந்தி , வி பி சிங் , நரசிம்மராவ் , குஜரால், வாஜ்பாய் , மன்மோகன்சிங் முதலியோரோடும் ஈழத்தமிழர் இனச்சிக்கலுக்குத் தீர்வு காண முயன்ற நீண்ட நெடிய பட்டறிவு மிக்கவர்.

மேலும், அவர் எமது சிக்கலுக்கு நியாயமான நிலைத்து நிற்கக் கூடிய ஒருத்தீர்வை விரைவில் காண்பார் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு என வடமாகாணக் கல்வி அமைச்சர் தம்பிராசா குருகுலராசா குறிப்பிட்டுள்ளார்.