எமது மக்களை நாமே ஆளக்கூடிய உரிமையினை ஏற்படுத்துவோம்- சுமந்திரன்

தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றும் வகையில் எமது மக்களை நாங்களே ஆளக்கூடிய வகையிலான உரிமையினை ஏற்படுத்தும் புதிய அரசியலமைப்பினை உருவாக்குவோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் பொங்கல் விழாவில் கலந்துக் கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், பல்வேறு ஏக்கத்தின் மத்தியிலும் இந்த வருடமும் தீர்வுத்திட்டம் தவறிப் போய்விடுமா என்ற கவலையுடனுமே இந்த தைப்பொங்கலை தமிழர்கள் கொண்டாடினர்.

புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படுமா? தமிழ் பேசும் மக்களுடைய அபிலாஷைகளை முழுமையாக பூர்த்திசெய்யக்கூடிய வகையில் எங்களது பகுதியை நாங்களே ஆளக்கூடிய வகையில் ஆட்சிமுறையைக்கொண்ட புதிய அரசியலமைப்பு சட்டம் ஒன்று உருவாகுமா என்ற கேள்வி இன்று எழுந்துள்ளது.

தீர்வுத்திட்டத்தை நாங்கள் இலகுவாகப்பெற்றுக்கொள்ளமுடியும் என நாங்கள் நம்பிக்கை கொள்ளவில்லை. அதன் காரணமாகவே மக்கள் மத்தியில் பல்வேறு கருத்துகள் எழுந்தன ஆனால் அதனை நடாத்தி முடிக்கின்ற பொறுப்பு தமிழ் மக்களின் அரசியல் பிரதிநிதிகள் மீது சுமத்தப்பட்டுள்ளது. அதனை தமிழ் தேசிய கூட்டமைப்பு செய்தாக வேண்டிய பொறுப்பு இருக்கின்றது.

ஒரு தீர்வுக்காக உயிர்களைக் கொடுத்து போராடியுள்ளோம். போராளிகளை மட்டுமன்றி மக்களின் உயிர்களையும் இதற்காக பறிகொடுத்துள்ளோம். அவ்வாறான தியாகங்களை செய்த எங்களினால் தீர்வினைப் பெற முடியாமல் போகுமா என்ற ஆதங்கம் பலரிடம் உள்ளது இந்த ஆட்சிமாற்றத்தினை ஏற்படுத்திய காலம் தொடக்கம். தமிழ் மக்களை அழித்தொழித்துவிடுவார்கள், தமிழர்களுக்கு நியாயமானதை தரமாட்டார்கள் என்ற காரணத்தினால் கடந்த ஆட்சிக்காலத்தை மாற்றுவதற்கான நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொண்டோம்.

இந்த நாட்டில் இருந்த சிறுபான்மை மக்களின் வாக்கு பலத்தினால் அவர்கள் வீட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். நம்பிக்கையுடன் தமிழ் மக்கள் வாக்களித்தனர். அதே நம்பிக்கையினை தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் தொடர்ச்சியாக பாரம் கொடுத்தனர். அதன் மூலமாகவே இந்த நிலைக்கு வந்துள்ளோம்.

தற்போது ஏற்பட்டுள்ள தடங்கலையும் தாண்டி பயணிப்பதற்கு சர்வதேச சக்தியே எங்களுக்கு முக்கியமாக நிற்கின்றது. இதில் இருந்து அரசாங்கம் தவறமுடியாது. இந்த நாட்டில் வாழும் பெரும்பான்மை மக்களும் மறுதலிக்க முடியாது என்கின்ற நிலைப்பாட்டில் இன்று உலகம் இருக்கின்றது என்றும் அவர் குறிப்பிட்டார்.