பெரும்பாலான விடயங்கள் எங்களுடைய ஒப்புதல் இல்லாமல் மத்திய அரசாங்கம் செய்கின்றது – சீ.வி. விக்னேஸ்வரன்

வடமாகாணத்தில் மத்திய அரசாங்கம் தம் நல்லெண்ணத்தை காட்டும் ஒரு சில நடவடிக்கைகளையே மேற்கொண்டிருக்கின்றது. அதனை விட மற்றைய பெரும்பாலான விடயங்கள் தாங்கள் நினைப்பதை எங்களின் விருப்பத்தை அறியாமல் எங்கள் மீது திணிப்பதாகவே இருக்கின்றது என வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் அவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகர் பிறைஸ் ஹச்சீசனிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.

நெடுந்தீவுக்கான போக்குவரத்து படகு நெடுந்தாரகை இன்று வெள்ளோட்டம் விடப்படவுள்ள நிலையில் இந்த நிகழ்வு நடைபெற்வுள்ளது.

இதில் கலந்து கொள்வதற்காக யாழ் சென்றிருந்த அவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகர் பிறைஸ் ஹச்சீசன் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை, அவருடைய இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

குறித்த சந்திப்பில் பேசப்பட்ட விடயங்கள் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே முதலமைச்சர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

முன்னேற்றகரமாக நடைபெற்றிருக்கும் விடயங்கள் தொடர்பாக அவர் என்னிடம் கேள்வி எழுப்பியிருந்தார்.

அதன்போது நான் குறிப்பிட்டது வட மாகாணத்தின் தேவை மதிப்பீட்டை செய்வதற்கு மத்திய அரசாங்கம் இணக்கம் தெரிவித்து அந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை.

குறிப்பாக அதில் ஆசிய அபிவிருத்தி வங்கி, உலக வங்கி, ஐரோப்பிய யூனியன் மற்றும் யு.என்.டீ.பி ஆகிய அமைப்புக்கள் பங்காற்றுகின்றன.

இதேபோன்று, புலம்பெயர்ந்திருக்கும் தமிழ் மக்கள் வடக்கில் முதலீடுகளை செய்யலாம் அதில் ஆட்சேபனை இல்லை என அண்மையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறியிருந்தார். அந்த விடயங்கள் முன்னேற்றகரனமாக விடயங்களாக உள்ளன.

ஆனால் பெரும்பாலான மற்றைய விடயங்கள் எங்களுடைய ஒப்புதல் இல்லாமல் மத்திய அரசாங்கம் தாங்கள் நினைத்தால் செய்யும் விடயங்களாகவே இருக்கின்றன என்பதை சுட்டிக்காட்னேன்.

இதேவேளை, அரசியல் ரீதியாக பேசும்போது எழுக தமிழ் மற்றும் தமிழ் மக்கள் பேரவை ஆகியன தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிரானவையா? என அவர் என்னிடம் கேட்டார்.

அவ்வாறில்லை இவை தமிழ் மக்கள் பேரவையும், எழுக தமிழும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பை வலுப்படுத்துவதற்காகவே என கூறியுள்ளதுடன், தமிழ் மக்கள் பேரவை தேர்தல்களில் போட்டியிடபோவதில்லை என்ற உறுதிப்படுத்தலை அவர்களிடமிருந்து பெற்றதன் பின்னரே நான் தமிழ் மக்கள் பேரவையில் பங்கெடுத்தேன் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.