sfs

கனடாவுக்கான பயணத்தை சம்பந்தன் தடுக்கவில்லை-விக்னேஸ்வரன்

கனடாவுக்கு செல்ல வேண்டாம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் என்னிடம் கோரவில்லை என்று வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் இம்மாதம் முற்பகுதியில் கனடாவுக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.

இந்த விஜயத்தை மேற்கொள்ளவேண்டாம் என தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் முதல்வரிடம் கேட்டதாகவும், அதனை முதல்வர் மறுத்ததாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன. குறித்த விடயம் தொடர்பாக முதலமைச்சர் ஊடகங்களுக்கு விளக்கமளிக்கையில் வெளிநாட்டு விஜயத்தின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர்களுடன் இணங்கி செயற்படுங்கள் என்றே அவர் என்னிடம் கேட்டார். அதனை நான் ஒத்துக்கொண்டேன். அவர் என்னை வெளிநாடு செல்லவேண்டாம், என கேட்டதாகவும் அதனை நான் நிராகரித்ததாகவும் செய்திகள் வெளியாவதை நானும் அறிந்திருக்கிறேன். ஆனால் அதில் உண்மையில்லை.

நான் இரா.சம்பந்தனை எதிர்க்கும் அல்லது பிரிவினை மனோபாவம் கொண்டவன் அல்ல. இரா.சம்பந்தன் கேட்டு கொண்டதற்கு இணங்கவே வெளிநாட்டிலும் நடந்து கொண்டேன்.

இரா.சம்பந்தன் ஒருவருடைய பெயரை குறிப்பிட்டு அவர்கள் கட்சியின் ஆதரவாளர்கள் என்பதால் என்னுடைய வெளிநாட்டு விஜயத்தின் போது அவர்களுடன் இணங்கி செயற்படுமாறு கேட்டுக்கொண்டார். அதனை ஒத்துகொண்ட நான் வெளிநாட்டுக்கு சென்றதும் அவர்களையும் அழைத்து அவர்களுடன் இணைந்து செயலாற்றும்படி கேட்டிருந்தேன்.

ஆனால் அந்த அழைப்புக்கு அவர் பின்வாங்கினார் அதற்கு காரணம் என்ன? என்பது எனக்கு தெரியவில்லை. பின்னர் நான் நாடு திரும்பும் போதும் அவர்களையும் அழைத்து ஒற்றுமையாக செயற்படுங்கள் என்பதை நான் வலியுறுத்தியிருந்தேன். மேலும், நான் இரா.சம்பந்தனுடன் பிரிவினை நோக்கில் அல்லது அவருக்கு எதிராக செயற்படவேண்டும் என்றவாறான மனோபாவங்களை கொண்ட ஒருவன் அல்ல என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.