எமது இனத்தின் விடிவுக்கு நல்லதொரு சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது – சாந்தி சிறிஸ்கந்தராசா

“நாங்கள் எத்தனையோ சந்தர்ப்பங்களைத் தவற விட்டுள்ளோம். இப்போது எமது இனத்தின் விடிவுக்கு நல்லதொரு சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது. இப்போதைய இந்த அரசாங்கம் மேற்கொண்டுள்ள முயற்சிகளுக்கு நாம் எமது ஆதரவை வழங்க வேண்டும்” என சென்ற ஞாயிற்றுக்கிழமை மாலை ததேகூ(கனடா) நடத்திய இரவு விருந்தின் போது சாந்தி சிறிஸ்கந்தராசாஈ நா.உ (முல்லைத் தீவு) தனது உரையில் குறிப்பிட்டார். மிகச் சிறப்பாக நடந்தேறிய இந்த விருந்தில் நா.உறுப்பினர்கள் கோடீஸ்வரன் அரியநாயகம் (அம்பாரை) சாந்தி சிறிஸ்கந்தராசா (முல்லைத்தீவு) சிறிநேசன் ஞானமுத்து (மட்டக்களப்பு) வட மாகாண கல்வி அமைச்சர் தம்பிராசா குருகுலராசா, வட மாகாண நல்வாழ்வு அமைச்சர் வைத்தியகலாநிதி சத்தியலிங்கம், கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சிங்காரவேல் தண்டாயுதபாணி, வட மாகாண சபை உறுப்பினர்கள் இமானுவேல் ஆனல்ட், ஜனாப் அயூப் அஸ்மின் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

தொடர்ந்து பேசிய சாந்தி சிறிஸ்கந்தரா அவர்கள் “கனேடியத் தமிழர் பேரவை இலங்கையின் வடக்குக் கிழக்கு மாகாணங்களின் கல்வி, சுகாதாரம், கொருண்மியம் ஆகிய துறைகளில் எவ்வாறு முன்னேற்றத்தை ஏற்படுத்தலாம் அதற்கான வழிவகைகள் என்ன என்பதை ஆராய ரொறன்ரோ நகரில் சென்ற சனவரி 15, 16, 17 நாட்களில் வட கிழக்கு மீள்கட்டமைப்பு மகாநாட்டினை வெற்றிகரமாக நடாத்தி முடித்துள்ளார்கள். அவர்களின் முயற்சிக்கு உங்கள் ஆதரவை வழங்குமாறு நான் உங்களைக் கேட்டுக்கொள்கின்றேன். இங்குள்ள குளிர் கால நிலையிலும் நீங்கள் கடுமையாகப் பாடு பட்டு உழைத்து வருகின்றீர்கள் என்பதை நான் அறிவேன். பலர் இரண்டு வேலைகளையும் செய்து வருகின்றீர்கள். அப்படியிருந்தும் நீங்கள் காட்டி வரும் ஆதரவுக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டார்.

கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் தண்டாயுதபாணி பேசும் போது ” காலநேர கட்டுப்பாட்டைக் கவனத்தில் கொண்டு நான் சில முக்கிய கருத்துக்களை முன் வைக்கின்றேன். கடந்த காலத்தை அசை போட்டுப் பார்க்கின்ற போது நாங்கள் ஒருகாலத்தில் அறவழியில் நின்று புத்திப் போராட்டத்தை நடத்தினோம். பின்னர் சக்திப் போராட்டத்தை, ஆயுத வழியில் நின்று நடத்தினோம். இந்த இரண்டு போராட்டத்திலும் நாங்கள் எதிர் பார்த்த பலன் கிட்டவில்லை. இன்றைய நிலையில் புத்தி பூர்வமாகவும் விவேகமாகவும் செயல் பட வேண்டிய நிலைக்கு நாங்கள் வந்துள்ளோம். உணர்ச்சிகளை நாங்கள் ஆள வேண்டும்; உணர்ச்சிகள் எங்களை ஆள விடக் கூடாது. அந்த வகையில் தான் எங்கள் தலைவர், எங்களை கருத்துக்களை நிதானமாகவும் நியாயமான முறையிலும் பகிர்ந்து கொள்ளுங்கள் எனவும் மற்றவர்களைப் புண் படுத்தக்கூடாது எனவும் கூறி எங்களைக் கட்டிப்போட்டிருக்கின்றார். அந்த வழியில் தான் நாங்கள் எங்கள் கருத்துக்களை வழங்க வேண்டியிருக்கின்றது. நீங்கள் எல்லோரும் நவீன செய்திப் பரிவர்தனைகளூடாக தாயகத்தில் நடக்கும் நிகழ்வுகளைப் பற்றி உடனுக்குடன் அறிந்து வருகின்றீர்கள்” எனக் குறிப்பிட்டார். 2007ஆம் ஆண்டில் வடக்கும் கிழக்கும் பிரிக்கப்பட்டத்தைக் குறிப்பிட்டார். அத்துடன், வட மாகாணத்தைப் போன்று கிழக்கு மாகாணம் முன்னேற முடியவில்லை. அது மட்டுமன்றி வெளிநாட்டில் இருந்து வரும் பிரதிநிதிகள் கிழக்குக்கு வருவது குறைவு எனவும் குறைபட்டுக் கொண்டார்.

வட மாகாண நல்வாழ்வு அமைச்சர் ப.சத்தியலிங்கம் பேசும் போது “30 ஆண்டுகளாக எமது இனம் உயிர், உடமைகளை இழந்து நிற்கின்றது, யுத்தத்திற்கு முன்பு இருந்த முரண்பாடுகள் காரணமாகவே யுத்தம் தொடங்கியது. தமிழர்களின் இருப்பினை இலங்கைத் தீவினில் உறுதிப்படுத்த வேண்டிய அவசியம் இன்று இருக்கின்றது. முக்கியமாக வடக்குக் கிழக்கில் மீண்டும் வலுவானதோர் கட்டமைப்பை ஏற்படுத்தல் அவசியம். அத்துடன் நிலையான சமாதானமும் எமக்கு அவசியம்” என வலியுறுத்தினார். மேலும், இலங்கையில் வட கிழக்குப் பிரதேசம் மிகவும் கஸ்டங்களை அனுபவித்து வருகின்றதெனவும் எமக்கு இரு மாகாணங்களும் இணைந்த தீர்வே பலனளிக்கும் என்றும் சொன்னார். மேலும் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் மீள் கட்டுமானம் தொடர்பாக, குறிப்பாக கல்வி, சுகாதாரம், பொருண்மியம் ஆகிய துறைகளை முன்னேற்றுவதற்காக ரொறன்ரோவில் மூன்று நாள் அனைத்துலக மகாநாடொன்றை வெற்றிகரமாக நடாத்தி முடித்த கனேடியத் தமிழர் பேரவைக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கனடாக் கிளையினருக்கும் மற்றும் அமைப்புக்களுக்கும் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

-வட மாகாண கல்வியமைச்சர் குருகுலராஜா பேசும் போது இலங்கையில் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படாமல் இருக்கிற நிலைமை பற்றி தனது கரிசனையை வெளியிட்டார். தாங்கள் பலதடவைகள் சிறைச்சாலைகளில் அரசியல் கைதிகளைச் சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூறியுள்ளதாகவும் ஆனாலும் அரசு இது தொடர்பாகத் தொடர்ந்து சாக்குப் போக்குகளைக் கூறித் தட்டிக் கழித்து வருவதாகவும் குறிப்பிட்டார்.

அம்பாரை நா.உறுப்பினர் அரியநாயகம் கோடீஸ்வரன் பேசும் போது “அம்பாரை மாவட்டத்தில் வாழும் தமிழ் மக்கள் பல இடர்ப்பாடுகனை சந்தித்து வருகிறார்கள். பட்டிப்பளை கல்லோயா ஆக மாறியதன் விளைவாக இன்று அம்பாரை மாவட்டத்தில் தமிழர்களின் எண்ணிக்கை 17 விழுக்காடாகக் குறைந்துள்ளது. தமிழர்களுடைய இனப் பெருக்கம் குறைந்து வருவதால் இப்போது இரண்டாம் இடத்தில் இருக்கும் கிழக்கு மாகாண தமிழ்மக்கள் இன்னும் பத்தாண்டுகளில் மூன்றாவது இடத்துக்கு தள்ளப்படும் அபாயத்தில் உள்ளார்கள். இலங்கை தொகை மதிப்பு புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி சிங்கள மக்களின் பிறப்பு விழுக்காடு 1.2332 ஆகவும், முஸ்லிம்களின் பிறப்பு விழுக்காடு 2.5357 ஆகவும் தமிழர்களின் பிறப்பு விழுக்காடு வெறுமனே 0.6565 விழுக்காடாகவும் இருக்கிறது.

வேறு விதமாகச் சொல்வதானால் முஸ்லிம்களை சிங்களவர்களோடு ஒப்பிடும் போது இரண்டு மடங்கும் தமிழர்களோடு ஒப்பிடும் போது நான்கு மடங்கும் பிறப்பு விகிதம் காணப்படுகிறது. இதனால் தமிழ் மக்களின் மொத்த மக்கள் தொகை 1981 -2012 காலப்பகுதியில் 1.56 விழுக்காடு குறைந்துள்ளது. இதே கால கட்டத்தில் முஸ்லிம்களின் தொகை 2.5 விழுக்காட்டால் அதிகரித்துள்ளது. கிழக்கு மாகாணத்தில் 1981 இல் 410,156 ஆக இருந்த இலங்கைத் தமிழர்கள், 2012 இல் 617,295 உயர்வடைந்த போதும் வளர்ச்சி விழுக்காடு 2.27% ஆகக் குறைந்துள்ளது. இதற்கான காரணிகளை ஆராய்வோமானால் 30 ஆண்டுகால யுத்தம், சுனாமிப் பேரிடர், வெளிநாடுகளுக்குப் புலப்பெயர்வு, கருச்சிதைவு, தமிழ் பிள்ளைகளது திருமண வயது தள்ளிப்போவது, வேலை காரணமாக வெளிநாடுகளுக்குச் செல்வது, சீதனக் கொடுமை போன்றவற்றைக் குறிப்பிடலாம். தமிழ்மக்கள் இதுபற்றிச் சிந்திக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்” கேட்டுக் கொண்டார்.

திரு நக்கீரன் பேசும் போது “ததேகூ (கனடா) போர் முடிந்த பின்னர் ஓகஸ்ட் 2009 இல் யாழ்ப்பாண மாநகர சபை, வவுனியா மாநகர சபை ஆகியவற்றுக்கு தேர்தல் நடை பெற்ற காலப் பகுதியில்தான் ததேகூ (கனடா) தோற்றம் பெற்றது. யாழ்ப்பாண மாநகர சபையோடு எனக்கு நெருக்கமான உறவு உள்ளது. அதில் நான் 5 ஆண்டுகளுக்கு மேலாகப் பணியாற்றியிருக்கிறேன். அது மட்டுமல்ல எனது வீடும் மாநரசபை எல்லைக்குள்ளேயே இருந்தது. ததேகூ பலத்த இடர்ப்பாடுகள் மத்தியில் தேர்தலை சந்தித்த சூழ்நிலையில் தேர்தல் செலவுக்காக ரூபா 18 இலட்சம் அளவில் திரட்டி அனுப்பி வைத்தோம்.

அதனைத் தொடர்ந்து ஏப்ரில் 2010 இல் நாடாளுமன்றத்துக்கு நடந்த பொதுத் தேர்தலின் போது பெருந்தொகை நிதியை திரட்டி அனுப்பினோம். பின்னர் 2011 இல் நடந்த உள்ளாட்சி தேர்தலின் போது நிதி சேகரித்து அனுப்பினோம். இந்தத் தேர்தலில் ததேகூ 32 உள்ளாட்சி மன்றங்களில் வெற்றி பெற்றது. 274 ததேகூ உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டார்கள். இதன் பின்னர் 2012 இல் கிழக்கு மாகாண சபைக்கு நடந்த தேர்தலின் போதும் நிதிகொடுத்தோம்.

இந்தத் தேர்தலில் மொத்தம் 37 இருக்கைகளில் 11 இருக்கைகளில் ததேகூ வெற்றி பெற்றது. 2013 இல் வட மாகாண சபைக்கு நடந்த தேர்தலில் பெருந்தொகை நிதி வழங்கினோம். சம்பந்தர் ஐயா கேட்டுக் கொண்டதற்கு இணங்க முதன்மை வேட்பாளர் விக்னேஸ்வரனுக்கு தனியே நிதியுதவி செய்தோம். மொத்தம் 38 இடங்களில் 31 இடங்களில் ததேகூ வென்றது.

2015 இல் நாடாளுமன்றத்துக்கு தேர்தல் நடந்த போது நிதி சேகரித்து அனுப்பினோம். புலம்பெயர் அமைப்புக்கள் சில ததேகூ வீழ்த்த கஜேந்திரகுமாரின் அகில இலங்கை காங்கிரசுக்கு பெருந்தொகை பணம் கொடுத்து உதவின. ஆதரித்து அறிக்கைகள் விட்டன. இருந்தும் காங்கிரஸ் கட்சி போட்டியிட்ட எல்லாத் தேர்தல் மாவட்டங்களிலும் கட்டுக்காசை இழந்தது. ததேகூ 14 தொகுதிகளில் வென்றது.

இப்படிச் சொல்வதால் ததேகூ(கனடா) தேர்தல் நிதி சேகரிப்பில் மட்டும் அக்கறை காட்டிய அமைப்பு என்று யாரும் நினைத்துவிடக் கூடாது. போரினால் பாதிக்கப்பட்ட எமது உறவுகளின் வாழ்வாதாரத்தை நிமிர்த்த பெருந்தொகை பணம் சேகரித்து அனுப்பினோம். கிளிநொச்சி மாவட்டத்துக்கும் மட்டும் 65 இலட்சம் கொடுத்து உதவினோம்.

கொக்கிளாய், கருநாட்டுக்கேணி, தென்னமரவடி, மட்டக்களப்பு ஆகிய இடங்களில் மீள்குடியமர்ந்த பெண்கள் தலைமை தாங்கும் 48 குடும்பங்களுக்கு தலைக்கு ஒரு இலட்சம் கொடுத்து உதவினோம். கிழக்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 25 இலட்சம் கொடுத்து உதவினோம்.

இந்த உதவிகளை நாம் செய்து முடிந்தற்கு எமது நண்பர்களும் ஆதரவாளர்களும் அளித்த ஆதரவே காரணம் ஆகும். அவர்கள் கிள்ளிக் கொடுக்காம் அள்ளிக் கொடுத்தார்கள். அவர்களுக்கு இந்தச் சந்தர்ப்பத்தில் நன்றி சொல்ல விரும்புகிறேன்” என்றார். (எஞ்சியவர்களது உரை பின்னர் வரும்)

அபிநய ஆலய நாட்டியாலம் பள்ளி ஆசிரியை இரஜினி சத்திரூபன் அவர்களது மாணவிகள் நடன விருந்து அளித்தார்கள்.

இரவு விருந்து மங்கல விளக்கேற்றலோடு தொடங்கியது. அதனைத் தொடர்ந்து கனடா தேசிய கீதம், தமிழ்த் தாய் வணக்கம் பாடப்பெற்றது. தலைமை உரையை ததேகூ (கனடா) இன் தலைவர் கதிரவேலு குகதாசன் ஆற்றினார். வரவேற்புரையை ததேகூ இன் துணைத்தலைவர் வீர சுப்பிரமணியம் ஆற்றினார்.

விருந்தினர்களுக்கு திருக்குறள் உட்பட நினைவுப் பரிசுகள் மேடையில் வைத்து வழங்கப்பட்டன. நன்றியுரையை சின்னத்துரை துரைராசா நிகழ்த்தினார்.