எமது மக்களின் பிரச்சணைக்கு நிரந்தரத் தீர்வாக அதிகாரப்பகிர்வு வேண்டும்-விக்னேஸ்வரன்

அதிகாரப் பகிர்வு தொடர்பில் பேச்சுக்கள் இடம்பெறும் இவ்வேளையில் வெளிவிவகார அமைச்சின் ஓர் துணை அலுவலகம் யாழில் திறந்து வைப்பதும் அதிகாரப் பகிர்வின் ஓர் கட்டமே என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

வெளிவிவகார அமைச்சின் கொன்சீலர் அலுவலம் யாழ் மாவட்டச் செயலகத்தில் வெளிவிவகார அமைச்சர் தலமையில் திறந்து வைக்கப்பட்டவேளையில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு உரையாற்றினார்.

வட மாகாண முதலமைச்சர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் ,

இந்த நாட்டில் அதிகாரப் பகிர்வு தொடர்பில் பேச்சுக்கள் இடம்பெறும் இவ்வேளையில் வெளிவிவகார அமைச்சின் ஓர் துணை அலுவலகமானது யாழ்ப்பாணத்தில் திறந்து வைப்பதும் அதிகாரப் பகிர்வின் ஓர் கட்டமே. எனவே இதனை இங்கு கொண்டு வந்தமைக்கு எனது நன்றியினைத் தெரிவித்துக்கொள்கின்றேன். இந்த அமைச்சினை தேவையுள்ள ஓர் மக்களிற்கு கிட்ட கொண்டுவந்துள்ளீர்கள்.

இப் பிரதேசத்தின் பலர் பல நாடுகளிலும் வாழும் நிலையில் அவர்களும் எமது நாட்டின் அபிவிருத்தியினை விரும்புகின்றனர். ஆனால் அவர்கள் இங்கே வருவதற்கு அஞ்சுகின்றனர். எனவே அவர்களின் அச்சத்தினை நீக்கி இந்த நாட்டின் அபிவிருத்திக்கு அவர்களின் உதவியினையும் பெறுவதற்கு வசதியாக புலம்பெயர் தமிழ் மக்களிற்கு பிரஜா உரிமை வழங்கப்படவேண்டும்.

இதேவேளை இந்த நாட்டின் பல விடயங்களில் கவனம் கொள்ளும் அதேநேரம் இந்தப் பகுதியில் கடந்த 4 நாட்களாக காணாமல் போனோர் விடயம் தொடர்பினில் ஓர் போராட்டம் இடம்பெறிகின்றது. அவ்வாறு போராட்டத்தில் இடம்பெறுபவர்களின் உடல் நிலமையும் மோசமடைகின்றது. எனவே அதற்கும் உடன் நடவடிக்கை எடுத்து சரியான பதிலளிக்க வேண்டும். உள்ளனரா அல்லது இல்லையா என உறுதியாக கூறவேண்டும். அதனை விடுத்து ஓர் சரியான விசாரணையின்றி அவர்கள் எல்லாம் இறந்த்தாக கூறுவதற்கு என்ன உரிமை உள்ளது.

எமது மக்களின் பிரச்சணைக்கு நிரந்தரத் தீர்வாக அதிகாரப்பகிர்வு வேண்டும். தமிழ் மக்களாகிய நாம் சிறுபான்மையினர் இல்லை. மத்தியின் அதிகாரம் மாகாணத்திற்குப் பகிரப்பட வேண்டும். அப்போதுதான் உண்மையான அதிகாரப் பகிர்வாக அமையும். என்றார்.